மாற்றுத்திறனாளி பெண் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு கருணை காட்ட முடியாது: உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தள்ளுபடி

மாற்றுத்திறனாளி பெண் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு கருணை காட்ட முடியாது: உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தள்ளுபடி
Updated on
1 min read

நெல்லையில் மாற்றுத்திறனாளியை பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர்களுக்கு கருணை காட்ட முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நெல்லை மாவட்டம் தாளமுத்து நகர் கோமஸ்புரத்தில் 2013-ல் ஆடு மேய்க்க சென்ற வாய் பேச முடியாத, காது கேட்கும் திறனற்ற பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் முயன்ற வழக்கில் சரவணமுத்து, செல்வம், லெட்சுமணகுமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் 3 பேருக்கும் 8 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2016-ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி 3 பேரும் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

இதனை விசாரித்து நீதிபதி கே.முரளிசங்கர் பிறப்பித்த உத்தரவு:

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடுமையான தண்டனை வழங்கப்பட்ட போதிலும், பெண்களை பார்க்கும் பார்வையில் முழுமையாக மாற்றம் ஏற்படவில்லை.

பெண் கருவறை முதல் கல்லறை வரை வன்முறையை சந்திக்கிறார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் மாற்றுத்திறனாளி. நடந்துள்ள குற்றத்தின் தீவிரத்தன்மையை பார்க்கையில் மனுதாரர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை அதிகப்படியானது அல்ல.

பெண்களை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். இதுமட்டும் போதாது. அனைத்து ஆண்களும் பெண்களை நன்றாக பார்த்துக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். எனவே இந்த வழக்கில் மனுதாரர்களுக்கு கருணை காட்ட முடியாது. கீழமை நீதிமன்ற உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மனுதாரர்களின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in