

குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்த 15 நாட்களில் தகுதியுள்ளவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்படும், என உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் புதிய குடும்ப அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று மாலை நடைபெற்றது.
திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில்,
திண்டுக்கல் மாவட்டத்தில் 3100 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் முதல்கட்டமாக 110 பேருக்கு தற்போது குடும்ப அட்டைகள் வழங்கப்படுகிறது. பொதுவிநியோகத் திட்டத்தை முழுவதும் கணினிமயமாக்குதல், பல துறைகள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளை ஒரே துறையின் கீழ் கொண்டு வரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது, என்றார்.
உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், தமிழக முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று விண்ணப்பிக்கும் அனைத்து தகுதியான நபர்களுக்கும் 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும் என்பது.
இந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதை நிறைவேற்றும்விதமாக விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த நபர்களுக்கு விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுவருகிறது.
குடும்ப அட்டைகளில் புதிய குடும்ப உறுப்பினர் சேர்க்கை, நீக்கம், முகவரி மாற்றம், குடும்ப அட்டை நகல் பெறுதல் ஆகியற்றிற்கு இணையவழியாக மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்படுகிறது.
மேலும் குடும்ப அட்டை வகைப்பாடு மாற்றம் செய்ய இணையத்தில் விண்ணப்பித்தால் உரிய விசாரணை மேற்கொண்டு குடும்ப அட்டை வகை மாற்றம் செய்யப்படும், என்றார்.