Published : 05 Jul 2021 09:31 PM
Last Updated : 05 Jul 2021 09:31 PM

பழநியை திருப்பதி போல தரம் உயர்த்த நடவடிக்கை: பக்தர்கள் கட்டணமின்றி முடிகாணிக்கை செலுத்த வசதி- அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி 

பழநியை திருப்பதி போல தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்களுக்கு கட்டணமின்றி இலவசமாக முடிகாணிக்கை செய்ய முதல்வருடன் கலந்துபேசி முடிவெடுக்கப்படும், என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயிலில் இன்று காலை முதல் மாலை வரை ஆய்வு நடத்திய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

150 ஆண்டுகள் பழமையான தைப்பூசத்தேர் பழுது அடைந்துள்ளதை மராமத்து செய்துவது, திருக்கோயில் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக பணியாளர்களாக பணிபுரிபவர்களை நிரந்தமாக்குவது, பழநியாண்டவர் கல்லூரியை பல்கலையாக தரம் உயர்த்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

பழநியை திருப்பதி போல தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில் பக்தர்கள் முடிகாணிக்கை செய்யக் கட்டணம் இல்லை.

இதேபோல் பழநியிலும் கட்டணம் இல்லாமல் முடிகாணிக்கை செலுத்துவது குறித்து முதல்வருடன்‌ கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். பழநியில் சித்தா கல்லூரி விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், பழநி கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடத்தப்படும்.

ஒட்டன்சத்திரம் பகுதியில் கலைக்கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரி ஆகியவை அமைக்க முதல்வருடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பழநி மலைக்கோயில் இரண்டாவது ரோப்கார் பணி 2017 ஆம் ஆண்டு பூமி பூஜை போடப்பட்டு தொடங்கியநிலையில் பணியை முடிக்காமல் இத்தனை ஆண்டுகள் தாமதம் ஆனதற்கு கடந்தகால ஆட்சியாளர்கள் ஏதோ எதிர்பார்ப்பில் இருந்துள்ளது தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது, என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x