

பாளை சிறை கைதி முத்துமனோ கொலை வழக்கின் தற்போதைய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை வாகைகுளத்தைச் சேர்ந்தவர் முத்து மனோ. இவரை கொலை மிரட்டல் வழக்கில் போலீஸார் கைது செய்து ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் அடைத்தனர். ஏப்ரல் 22-ல் பாளைங்கோட்டை மத்திய சிறையில் முத்து மனோ அடைக்கப்பட்டார். அன்று மதியம் சிறையில் கைதிகள் இடையே நடைபெற்ற மோதலில் முத்துமனோ கொலை செய்யப்பட்டார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 70 நாட்களுக்கு மேலாக முத்துமனோவின் உடலை வாங்காமல் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் முத்துமனோ கொலை தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், நீதி விசாரணை நடத்தவும், ரூ.2 கோடி இழப்பீடு கேட்டும் அவரது தந்தை பாபநாசம் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணைக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, முத்துமனோவின் உடலை வாங்கிக்கொண்டு இறுதி சடங்குகளை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் கெடு விதித்தது. இதையடுத்து அவரது உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், கொலை செய்யப்பட்ட முத்துமனோ, பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் 60 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் கொலை நடைபெற்று 70 நாட்களுக்கு மேலாகியும் இது வரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. விசாரணை உரிய முறையில் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டது.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணை உரிய முறையில் நடைபெறுகிறது. உயர் அதிகாரிகள் விசாரணையை கண்காணித்து வருகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்டோர் தரப்பில் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றார்.
இதையடுத்து, முத்துமனோ கொலை வழக்கின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் கோரிக்கை தொடர்பாக கூடுதல் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 19-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.