Last Updated : 05 Jul, 2021 08:13 PM

 

Published : 05 Jul 2021 08:13 PM
Last Updated : 05 Jul 2021 08:13 PM

மத்திய அரசின் வீரதீர செயலுக்கான விருது: ஆற்றில் அடித்துச்சென்ற சிறுவனைக் காப்பாற்றிய தஞ்சை காவலர் தேர்வு

ராஜ்கண்ணன்

தஞ்சாவூர்

மத்திய அரசு சார்பில் வீர தீரச் செயல்களில் ஈடுபடும் போலீஸாருக்கு வழங்கப்படும், பிரதம மந்திரியின் உயிர்காக்கும் காவலர் விருதுக்காக தஞ்சாவூர் காவலர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த தென்னமநாடு மேலத்தெருவைச் சேர்ந்தவர் எஸ்.ராஜ்கண்ணன் (35), இவர் கடந்த 2010-ம் ஆண்டு போலீஸில் பணிக்குச் சேர்ந்து, தஞ்சாவூர் ஆயுதப்படை பிரிவு காவலராக 10 ஆண்டுகளாகப் பணியாற்றினார். தற்போது பட்டுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த 2015-ம் ஆண்டு, பணிக்காகக் காலையில் ஊரில் இருந்து தஞ்சாவூருக்கு ராஜ்கண்ணன் சென்றுள்ளார். அப்போது தஞ்சாவூர் ஆத்துப்பாலம் அருகே சென்றபோது, கல்லணை கால்வாய் ஆற்றில் சிறுவன் ஒருவன் தவறி விழுந்ததை அறிந்தார். அப்போது ஆற்றங்கரையில் நடைப்பயிற்சி சென்றவர்கள், தீயணைப்புப் படையினருக்கு போன் செய்து தெரிவித்துவிட்டு, கூட்டமாக நின்றுள்ளனர்.

இதைப்பார்த்த ராஜ்கண்ணன் உடனடியாக ஆற்றில் குதித்து சுமார் 500 மீட்டர் வரை தண்ணீரில் நீந்திச் சென்று, ஆற்றில் விழுந்த சிறுவனின் உயிரைக் காப்பாற்றினார்.

இதையடுத்து ராஜ்கண்ணன் செயலை அறிந்த அப்போதைய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தர்மராஜன், மாவட்ட ஆட்சியர் சுப்பையனிடம் தெரிவித்துள்ளார். அவர் தமிழக அரசின் வீரதீரச் செயலுக்கான விருதுக்குப் பரிந்துரை செய்த நிலையில், தமிழக அரசு சார்பில் மத்திய அரசின் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில், 2018-ம் ஆண்டுக்கான விருது கடந்த ஜூன் 30-ம் தேதி அறிவிக்கப்பட்டதில், நாடு முழுவதும் 14 பேர் தேர்வாகினர். அதில், தமிழகத்தில் இருந்து ராஜ்கண்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சக போலீஸார் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ராஜ்கண்ணனின் மனைவி சரண்யா, ஒரத்தநாடு காவல் நிலையத்தில் , முதல் நிலைக் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு திவான் (5), தீரன்(2) என இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜ்கண்ணனின் தம்பி ராஜராஜனும் தஞ்சாவூர் ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வருகிறார்.

இதுகுறித்து ராஜ்கண்ணன் கூறுகையில், ''சிறுவன் ஆற்றில் விழுந்ததால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது. ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் சென்றதாலும், காலை நேரம் என்பதாலும் ஆற்றில் இறங்கப் பலரும் தயக்கம் காட்டினர். ஆனால் உயிரைத் துச்சமாக நினைத்து ஆற்றில் குதித்து, போராடிக்கொண்டிருந்த சிறுவனைக் காப்பாற்றினேன். அதன் பிறகு பணிக்குக் காலதாமதமாகச் சென்றபோது, எஸ்.பி. விசாரித்து என்னைப் பாராட்டினார்.

அதன் பிறகு விருதுக்கும் பரிந்துரை செய்தனர். வீரதீரச் செயலுக்கான 2018-ம் ஆண்டு விருதை நாட்டிலேயே 14 பேர் பெறும் நிலையில் அதில் நானும் ஒருவன் என்பது பெருமையாக உள்ளது. இந்தத் தகவல் தற்போதுதான் எனக்குக் காவல்துறை மூலம் தெரிவிக்கப்பட்டது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x