Last Updated : 05 Jul, 2021 07:44 PM

 

Published : 05 Jul 2021 07:44 PM
Last Updated : 05 Jul 2021 07:44 PM

யானை தீவனப் பயிர்கள்: 43 பூர்விக தீவன மர, புல் இனங்களை ஆவணப்படுத்தி கோவை வனக்கல்லூரி ஆராய்ச்சி

கோவை வனப்பகுதியில் மலைச்சரிவில் உள்ள புல்வெளியில் மேயும் காட்டு யானை (கோப்புப் படம்)

கோவை

வனப்பகுதியில் யானைகளுக்கான தீவனப் பயிர்களை அதிகரிக்கும் வகையில் 43 பூர்விக தீவன மர, புல் இனங்களை ஆவணப்படுத்தி கோவை மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

கோவை வனக்கோட்டப் பகுதிகளில், மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகளில் பூர்வீக தீவனப் புற்களை விதைத்து, நடவு செய்து யானைகள், பிற தாவர உண்ணிகளுக்குத் தீவனங்கள் கிடைப்பதை அதிகரிக்க வனத்துறை முடிவு செய்தது. இதுகுறித்து ஆராய்ச்சி செய்ய கோவை வன வளர்ச்சி முகமை, நீலகிரி வன வளர்ச்சி முகமை ஆகியவை இணைந்து மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களை ஈடுபடுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக வனக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனம் ஓர் இடைக்கால அறிக்கையை வனத்துறையிடம் வழங்கியுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''யானை- மனித மோதலைத் தடுக்க வனப்பகுதிக்குள் தீவனப் பயிர்கள், தீவன மரங்களை உற்பத்தி செய்து பெருக்கும் வகையில் கடந்த ஏப்ரல் முதல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, 29 தீவன புல் இனங்கள் சிறுமுகை காடுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அடையாளம் காணப்பட்ட தீவன புற்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகளுக்காக நாற்றங்காலில் பெருக்குவதற்கு வளர்க்கப்பட்டுள்ளது. சிறுமுகை காடுகளில் 14 பூர்வீக தீவன மர இனங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதில் இரண்டு தீவன மரங்களின் விதைகள் கிடைத்ததால், அவை சேகரிக்கப்பட்டு நர்சரியில் விதைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, இரு தீவன மரங்களின் தண்டு குச்சிகள் சேகரம் செய்யப்பட்டு நடப்பட்டுள்ளன. தீவன வங்கிக்காகவும், தீவன மரங்களை வெகுவாகப் பெருக்குவதற்கான ஆய்வுகளுக்காகவும் 5 தீவன மர இனங்களின் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட பூர்வீக தீவனப் புற்கள், தீவன மரங்களின் இலை மாதிரிகள் மற்றும் தாவர பாகங்களைச் சேகரம் செய்து அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை வகைப்படுத்துவதற்கு அதனை நிழலில் உலர்த்தி பொடியாக்கும் வேலை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் முனைவர்கள் எம்.பி.திவ்யா, கே.பரனிதரன், கே.டி.பார்த்திபன், எஸ்.கீதா, கே.என்.கனேசன், ஆர்.ரவி, எஸ்.மணிவாசகன் மற்றும் எம்.விஜயபாமா, ஆகியோரால் இந்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x