மோடி அரசு இருக்கும் வரை பெட்ரோல் விலை குறையாது; தமிழகத்தில் நிராகரிக்கப்பட்ட கட்சி பாஜக- கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி

காரைக்குடியில் பாஜகவில் நீக்கப்பட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கார்த்தி சிதம்பரம் எம்பி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தனர். அருகில் எம்எல்ஏக்கள் மாங்குடி, கரியமாணிக்கம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி.
காரைக்குடியில் பாஜகவில் நீக்கப்பட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கார்த்தி சிதம்பரம் எம்பி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தனர். அருகில் எம்எல்ஏக்கள் மாங்குடி, கரியமாணிக்கம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி.
Updated on
1 min read

மோடி அரசு இருக்கும் வரை பெட்ரோல் விலை குறையாது என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். தமிழகத்தில் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிதான் பாஜக என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது புகார் தெரிவித்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சந்திரன், பாலா, பிரபு ஆகிய நிர்வாகிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கார்த்தி சிதம்பரம் எம்.பி., எம்எல்ஏக்கள் மாங்குடி, கரியமாணிக்கம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸில் சேர்ந்தனர்.

பிறகு கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''ஒன்றிய அரசு என்பது சரியான வார்த்தைதான். யூனியன் என்ற ஆங்கில வார்த்தைக்கு ஒன்றியம் என்றுதான் அர்த்தம். அதனால் அதிமுக சொல்லும் கருத்து தவறானது. பொருளாதாரம் பல மடங்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு மாற்று அரசியல் தேவை. அதற்கு தலைமை தாங்கத் தகுதியான இயக்கம் காங்கிரஸ் மட்டுமே.

மற்ற நாடுகளில் அனைத்து பொருட்களுக்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டிதான் உள்ளது. ஆனால் இந்தியாவில் மட்டுமே ஒவ்வொரு பொருளுக்கும் வெவ்வேறு விதமான ஜிஎஸ்டி உள்ளது. அதையும் அடிக்கடி மாற்றுவதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால் அரசுக்கு வரி வருமானம் குறைந்துவிட்டது. அதனால் 130 கோடி மக்களையும் வரி செலுத்த வைக்க பெட்ரோல், டீசல் மீது அதிக வரியை விதிக்கின்றனர். மேலும் செஸ் வரி வசூலித்தால் மாநிலங்களுக்குக் கொடுக்கத் தேவையில்லை. மோடி அரசு இருக்கும் வரை பெட்ரோல், டீசல் விலை குறையாது.

நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சி

தமிழகத்தில் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிதான் பாஜக. அக்கட்சியின் சித்தாந்தத்தை மக்கள் ஏற்கவில்லை. பத்து ஆண்டுகளாகச் செயலற்று இருந்த தமிழகத்தைச் சீர் செய்ய 60 நாட்கள் போதாது. தமிழகத்தில் உள்ள குளறுபடிகளைத் திமுக அரசு நிச்சயம் சரிசெய்யும். சிவகங்கையில் சட்டக் கல்லூரி, கானாடுகாத்தானில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க நானும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் முதல்வரை சந்தித்து வலியுறுத்தினோம்'' என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in