Last Updated : 05 Jul, 2021 07:07 PM

 

Published : 05 Jul 2021 07:07 PM
Last Updated : 05 Jul 2021 07:07 PM

பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: தமிழக அரசு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்த 12 வயது சிறுவனுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகரைச் சேர்ந்த ஜெயராணி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

என் 12 வயது மகன் 9.11.2018-ல் பள்ளி முடிந்த வீடு திரும்பியதும் உப்பாத்தூர் பகுதியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அப்பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் என் மகன் காயமடைந்தான். 50 சதவீத தீக்காயத்துடன் சிரமப்பட்டு வருகிறான். அவனது சிகிச்சைக்காக இதுவரை ரூ.10 லட்சம் வரை செலவாகியுள்ளது.

நான் கூலி வேலைக்கு செல்கிறேன். மாதம் ரூ.8000 மட்டுமே சம்பளம் கிடைக்கும். என்னால் மகனுக்கு சிகிச்சைக்கு செலவு செய்து வாழ்க்கையை நடத்துவது சிரமமாக உள்ளது. எனவே ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும், சட்டவிரோதமாக பட்டாசு ஆலை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:

விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. இதில் காயமடைவோருக்கு அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. சட்டவிரோத பட்டாசு ஆலைகளை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருதுநகர் மாவட்டம் பெரிய அளவில் பட்டாசு ஆலை விபத்துகள் நடைபெறுவதும், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது என்பது தொடர் கதையாக உள்ளது. இந்த வழக்கில் மனுதாரர் மகன் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளான்.

அரசின் நிவாரண உதவி இயற்கை சீற்றங்கள், எதிர்பாராத இழப்புகள், விபத்துகள், உயர்கல்வி தேவைக்கு உதவி செய்யவே உருவாக்கப்பட்டது. எனவே, முதல்வர் நிவாரண நிதியில் இருந்து மனுதாரருக்கு 6 வாரத்தில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x