சிவசங்கர் பாபா வழக்கில் தேடப்பட்டு வந்த பள்ளி நிர்வாகி, ஆசிரியை, பக்தைகளுக்கு முன்ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சிவசங்கர் பாபா வழக்கில் தேடப்பட்டு வந்த பள்ளி நிர்வாகி, ஆசிரியை, பக்தைகளுக்கு முன்ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மாணவிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் தந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசிங்கர் பாபாவின் பக்தைகள் ஐந்து பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளியில் படித்த மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

சிவசங்கர் பாபா தலைமறைவானார். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின்னர் சிபிசிஐடி போலீஸார் டெல்லியில் சிவசங்கர் பாபாவைக் கைது செய்தனர். சிவசங்கர் பாபாவிற்காக மாணவிகளை மூளைச் சலவை செய்ததாக அவரது பக்தை சுஷ்மிதாவும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு உதவியதாகப் பள்ளியின் நிர்வாகி ஜானகி சினிவாசன், பள்ளியின் ஆங்கில ஆசிரியை தீபா வெங்கடராமன், பக்தைகள் கருணாம்பிகை, திவ்யா, பாரதி ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர் அவர்கள் தலைமறைவான நிலையில் தாங்கள் கைது செய்யப்படாமல் இருக்க முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் இன்று நீதிபதி எம்.தண்டபாணி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றவியல் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை அறிக்கையாக சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்தனர். இதனைப் பதிவு செய்த நீதிபதி, சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுகளில் முன்ஜாமீன் கோரியுள்ள ஐவருக்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லை எனக் கூறி, ஐந்து பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதன்படி, ஐந்து பேரும் 2 வாரங்களுக்குக் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் தங்களுடைய பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in