Last Updated : 05 Jul, 2021 04:55 PM

 

Published : 05 Jul 2021 04:55 PM
Last Updated : 05 Jul 2021 04:55 PM

மணப்பாறையில் 91 மி.மீ. மழைப்பதிவு; வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு

தெரணிபாளையம் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் நேற்று 4 மணி நேரத்துக்கும் மேலாகப் பெய்த பலத்த மழை காரணமாக புள்ளம்பாடி ஒன்றியத்தில் 3 கிராமங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார்.

வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் நேற்று (ஜூலை 05) மாலை 6.45 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை மழை பெய்தது.

பலத்த மழை காரணமாக மாநகரில் வடிகால்கள், கழிவுநீர் சாக்கடைகள் நிரம்பி வழிந்தன. சாலைகள் தோறும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் நேற்று பகல் முழுவதும் நிலவிய கடும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

மேலும், லால்குடி வட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்தில் தெரணிபாளையம், நல்லூர், நம்புக்குறிச்சி ஆகிய கிராமங்களில் 150-க்கும் அதிகமான வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. அந்தப் பகுதியில் உள்ள நந்தியாறு வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததாலேயே தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, தகவலறிந்து சட்டப்பேரவையின் லால்குடி தொகுதி உறுப்பினர் அ.சவுந்தரராஜன், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, லால்குடி கோட்டாட்சியர் ச.வைத்தியநாதன் ஆகியோர் மழையில் குடைபிடித்தவாறே சென்று மழைநீர் புகுந்த வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தெரணிபாளையம் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட அ.சவுந்தரபாண்டியன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உள்ளிட்டோர்.

மழை நீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்கள் அந்தப் பகுதிகளில் இருந்த பள்ளிக் கட்டிடங்களில் தங்கவைக்கப்பட்டு இன்று (ஜூலை 05) காலை வீடு திரும்பினர்.

தொடர்ந்து, இன்று காலை மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள நந்தியாறு வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும், பல ஆண்டுகளாகத் தூர்வாரப்படாததாலும் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துவிட்டதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து, நந்தியாறு வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை தெரணிபாளையம் முதல் சிறுகளப்பூர் வரை அகற்றி தூர்வாரவும், தெரணிபாளையத்தில் உள்ள ஏரியின் கரைகளை பலப்படுத்தவும் அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார். இதற்கான பணிகளில் பொதுப்பணித் துறை அலுவலர்கள் முன்னெடுத்துள்ளனர்.

மணப்பாறையில் 91 மி.மீ. மழைப் பதிவு

திருச்சி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக மணப்பாறையில் 91 மி.மீ. மழை பதிவானது. இதேபோல், வாத்தலை அணைக்கட்டு 90.60 மி.மீ., நவலூர் குட்டப்பட்டு 79.20 மி.மீ., பொன்மலை 79 மி.மீ., விமான நிலையம் 65.20 மி.மீ., துறையூர் - துவாக்குடி தலா 50 மி.மீ., திருச்சி நகரம் 47 மி.மீ., பொன்னணியாறு அணை 46 மி.மீ., திருச்சி ஜங்ஷன் 45.20 மி.மீ., மருங்காபுரி 42.40 மி.மீ., லால்குடி 42.20 மி.மீ., புலிவலம் 40 மி.மீ., முசிறி 31 மி.மீ., கோவில்பட்டி 29.20 மி.மீ., சமயபுரம் 26.40 மி.மீ., தென்பரநாடு 24 மி.மீ., நந்தியாறு தலைப்பு 21.20 மி.மீ., தேவிமங்கலம் 15 மி.மீ., சிறுகுடி 12 மி.மீ., கொப்பம்பட்டி 10 மி.மீ.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x