

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் அரசுப் பேருந்துகள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து, தமிழகம் வரும் வெளிமாநிலப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை எதிரொலியாகக் கடந்த மே 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, அனைத்து மாவட்ட அரசுப் பேருந்துகளின் இயக்கத்துக்குத் தடைவிதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழக ஓசூர் எல்லையில் இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஓசூர் - பெங்களூரு இடையே இயங்கி வந்த இருமாநில அரசுப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.
தற்போது தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் கரோனா தொற்று பாதிப்பு அடிப்படையில் மாவட்டங்கள் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு முதல் கட்டமாக 3-ம் பிரிவில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் ஜுன் 21-ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளின் இயக்கம் தொடங்கப்பட்டது. இரண்டாவது கட்டமாகக் கடந்த ஜுன் 28-ம் தேதி முதல் கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, மதுரை உள்ளிட்ட 23 மாவட்டங்களிலும் அரசுப் பேருந்துகளின் இயக்கம் தொடங்கப்பட்டு, ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து 27 மாவட்டங்களுக்கு 500-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் 50 சதவீதப் பயணிகளுடன் இயக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் ஜுலை 5-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கிடையே ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, நீலகிரி, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் இன்று காலை 6 மணி முதல் அரசுப் பேருந்துகளின் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழக எல்லையான ஓசூருக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஓசூரிலிருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் தமிழக எல்லையான ஜுஜுவாடியிலும், பெங்களூரு நகரிலிருந்து ஓசூர் வரும் பயணிகள் கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளி மற்றும் ஜுஜுவாடியிலும் இறக்கி விடப்படுகிறார்கள்.
இந்தப் பயணிகள் அனைவரும் தமிழக எல்லையான ஜுஜுவாடியில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருமாநில அரசுப் பேருந்துகளில் ஏறி ஓசூர் மற்றும் பெங்களூரு நகருக்குப் பயணித்து வருகின்றனர். இதற்காக ஓசூர் - ஜுஜுவாடி வழித்தடத்தில் 5 நிமிடத்துக்கு ஒரு பேருந்து என மொத்தம் 15 தமிழகப் பேருந்துகளும், அதேபோல பெங்களூரு - ஜுஜுவாடி இடையே 30-க்கும் மேற்பட்ட கர்நாடக அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இருப்பினும் இருமாநில எல்லையிலும் பயணிகள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாகக் குவிந்து வருகின்றனர்.
இதுகுறித்து பெங்களூரு நகரைச் சேர்ந்த பயணி முருகன் கூறும்போது, ''சேலம் எனது சொந்த ஊராகும். ஆண்டுக்கு இரண்டு, மூன்று முறை குடும்பத்துடன் சென்று வருவோம். கரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்குக் குடும்பத்துடன் செல்ல முடியவில்லை. இன்றிலிருந்து சேலத்துக்கு அரசுப் பேருந்து விடப்படுவதை அறிந்து குடும்பத்துடன் சொந்த ஊருக்குப் புறப்பட்டிருக்கிறேன்'' என்று தெரிவித்தார்.