ஆட்சி மாறியும் மாறாத காட்சிகள்: பட்டப்பகலில் தொடரும் மண் கொள்ளை

உடுமலையில் உள்ள பெரியகுளத்தில் மண் கொள்ளை நடைபெற்ற போது எடுத்த படம். | படம்: எம்.நாகராஜன்.
உடுமலையில் உள்ள பெரியகுளத்தில் மண் கொள்ளை நடைபெற்ற போது எடுத்த படம். | படம்: எம்.நாகராஜன்.
Updated on
2 min read

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த பெரியகுளத்தில் இருந்து அரசின் முறையான அனுமதியின்றி நூற்றுக்கணக்கான லோடு மண் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்துப் பொதுமக்கள் கூறும்போது, ''உடுமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல ஆண்டுகளாக நீர்நிலைகளில் அரசின் அனுமதியின்றி மண் வளம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. முந்தைய ஆட்சியில் அதிகாரம் மிக்கவர்களின் தலையீடுகளால் அதிகாரிகளும் நடவடிக்கை ஏதுமின்றி வேடிக்கை பார்த்து வந்தனர். ஆனால், திமுக வந்து ஆட்சி மாறியபோதும் காட்சி மாறாமல் அதே முறைகேடுகள் தொடர்ந்து வருவது வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

எங்கோ தொலைவில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் மறைமுகமாக நடைபெற்று வந்த மண் கொள்ளை, தற்போது பகிரங்கமாகவே நடைபெற்று வருகிறது. இம்முறைகேட்டில் ஆளுங்கட்சியினரின் தலையீடு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உடுமலை அடுத்த ஆத்துக்கிணத்துப்பட்டி கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான பூமியில் இருந்து ஆயிரக்கணக்கான லோடு மண் எடுக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. உடுமலை- தளி சாலையில் தனியார் பள்ளியின் பின்புறம் உள்ள பெரியகுளத்தில் பட்டப்பகலிலேயே மண் திருட்டு அரங்கேறி வருகிறது.

தினமும் நூற்றுக்கணக்கான லோடு, இரவு பகலாகக் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கொள்ளையடிக்கப்படும் மண் ஒரு லோடு ரூ.2,000 முதல் ரூ.4,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த பல மாதங்களாகவே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட மண், சில இடைத்தரகர்களின் இடத்தில் மலைபோல் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது

பெரியகுள
பெரியகுள

அப்பாவி கிராம மக்கள் அல்லது சிறு, குறு விவசாயிகள் தங்களின் சொந்தத் தேவைக்கு மண் எடுக்கச் சென்றால் வாகனம் பறிமுதல், காவல்துறையில் வழக்கு எனப் பல்வேறு நடவடிக்கைகள் பாய்கின்றன. ஆனால் இதுபோன்ற மாஃபியாக்கள் நிகழ்த்தும் முறைகேடுகள் கண்டுகொள்ளப்படுவதில்லை.

முதல்வர் எடுத்து வரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இதுபோன்ற முறைகேடுகள் இப்பகுதி மக்களிடையே அந்த எண்ணத்தைச் சிதைப்பதாகவே உள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறையிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து ஆட்சியர் உரிய முறையில் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தனர்.

இதுகுறித்துக் கோட்டாட்சியர் கீதாவிடம் கேட்டபோது, ''உடுமலை கோட்டத்தில் எந்தப் பகுதியிலும் மண் எடுக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அவ்வாறு மணல் எடுக்கப்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in