

கரோனா நிவாரண நிதிக்கு வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் 10 லட்ச ரூபாய் கொடுத்துள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பலரும் யூடியூப் சேனலில் தனியாகக் கணக்கு தொடங்கி, தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதில் பலரும் சமையல் தொடர்பான யூடியூப் சேனல்தான் தொடங்கியுள்ளனர். இதில் முன்னணியில் உள்ள சேனல்தான் வில்லேஜ் குக்கிங் சேனல் (Village Cooking Channel).
மொத்தம் 5 பேர் கொண்ட இந்த சேனல், தமிழகத்தில் மிகவும் பிரபலம். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இவர்களுடன் இணைந்து சமைத்து, சாப்பிட்டு மகிழ்ந்தார் ராகுல் காந்தி. அதிலிருந்து இந்திய அளவில் பிரபலமான சேனலாக வில்லேஜ் குக்கிங் சேனல் (Village Cooking Channel) உருவாகியுள்ளது.
ஒவ்வொரு முறை சமைக்கும்போதும், இவர்களுடைய கிராமத்துப் பேச்சு முறை என மக்களை வெகுவாகக் கவர்ந்தது. தற்போது தென்னிந்தியாவில் முதல் யூடியூப் சேனலாக 1 கோடி சந்தாதாரர்களைக் கடந்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இந்த சாதனையைக் கொண்டாடும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து 10 லட்ச ரூபாயை கரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளனர். இது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆகையால் பலரும் இந்த யூடியூப் சேனலுக்கு பாராட்டு தெரிவிக்க, ட்விட்டர் தளத்தில் #VillageCookingChannel என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது.
மேலும், தங்களுடைய வளர்ச்சி எப்படித் தொடங்கி தற்போது எந்த அளவுக்கு வளர்ந்துள்ளோம் என்பதையும் வீடியோவாகப் பேசி வெளியிட்டுள்ளனர். அதைப் பலரும் பகிர்ந்து இந்த யூடியூப் குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.