

பாஜக மாநில இளைஞர் அணிசெயற்குழுக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடந்தது. மாநில இளைஞர் அணிசெயலாளர் வினோஜ் பி.செல்வம்தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளர்கள் கே.டி.ராகவன், கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், நடிகர் சூர்யாவுக்குஎதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா தொடர்ந்து உண்மைக்கு மாறாக பேசி வருகிறார். பிரதமர் மோடி அரசின் மக்கள் நலத் திட்டங்கள், சட்டங்களை உள்நோக்கத்துடன் சுய விளம்பரத்துக்காக எதிர்த்து வருகிறார். படைப்பாளிகளின் உரிமையை பாதுகாக்கும் ஒளிப்பதிவு திருத்தச் சட்ட வரைவுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சூர்யாவின் செயல் கண்டனத்துக்குரியது. தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வந்தால் அவர் மீது பாஜகஇளைஞர் அணி மூலம் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் ‘ஜெய்ஹிந்த்’ என்ற சொல்லை இழிவுபடுத்தும் வகையில் பேசிய திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் மற்றும் நீட் தேர்வு குறித்து தமிழகமாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் திமுக அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கரோனா 2-வது அலையை வெற்றிகரமாக எதிர்கொண்ட பிரதமர் மோடிக்கு பாராட்டு. கோயில் நிலங்களை மீட்க முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை உடனே திறக்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, சமையல் எரிவாயு மானியம், குடும்பத் தலைவிகளுக்கு மாதஊதியம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.