

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள முஸ்லிம்களுக்கு 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி இருப்பதாக காதர்மைதீன் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு மார்ச் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.அமீர்அப்பாஸ் வரவேற்றார். பொதுச் செயலர் அபுபக்கர், முன்னாள் எம்பி அப்துல் ரகுமான், மாநில செயலர்கள் மஜீத், ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் எம்பியுமான காதர் மைதீன் கலந்து கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் தலைமை ஹாஜி அறிவிக்கும் நாளை பின்பற்றாமல் முஸ்லிம் பண்டிகையை விருப்பம்போல் கொண்டாடுகின்றனர். இந்துக்களும், கிறிஸ்தவர்களும் அவர்களது பண்டிகையை ஒரே தினத்தில் தான் கொண்டாடுகின்றனர்.
ஆனால், போட்டி ஜமாத்துக்களை வைத்துக் கொண்டு மதத்துக்கு எதிராகவும், முஸ்லிம் அமைப்புகளை பிளவுபடுத்துகிற வகையிலும் செயல்படுகின்றனர். இதை ஒருங்கிணைக்கவே ஜமாத் ஒருங்கிணைப்பு மாநாடு விழுப்புரத்தில் நடத்தப்படுகிறது.
முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடை 5 சதவீதம் உயர்த்த வேண்டும். பள்ளி வாசல்களில் பதியும் திருமணப் பதிவையும் அரசு ஏற்க வேண்டும்.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கும் சிறுபான்மை அந்தஸ்தை அபகரிக்க முயற்சியை கைவிட வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்படும்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும். கூட்டணியில் உள்ள முஸ்லிம் சமூகத்தினருக்கு 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு அதிக தொகுதிகளை வழங்க வேண்டும் என்றும் திமுக தலைமையிடம் வலியுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்தால் உங்கள் நிலைப்பாடு என்ன என்று கேட்டபோது, ஒரு சிலர் குழப்பத்தை ஏற்படுத்தவே இதுபோன்று பேசி வருகின்றனர். அதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லை என குறிப்பிட்டார்.