

கரோனா தொற்றின் பாதிப்பு முற்றிலுமாக குறைய, வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.72 லட்சம்மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, காங்கயம் சிவன்மலை ஊராட்சிக்கு உட்பட்டசாவடிபாளையத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமை வகித்தார். அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் (செய்தித் துறை), என்.கயல்விழி செல்வராஜ் (ஆதிதிராவிடர் நலத் துறை) ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவ உபகரணங்களை வழங்கினர். இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒவ்வோர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மருத்துவஉபகரணங்கள் வழங்கப்படுகின்றன. தற்போதைய சூழலில் அனைத்து மக்களும் மருத்துவமனைகளை நாட வேண்டிய நிலை உள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் மேற்கொள்ளப்பட்ட போர்க்கால நடவடிக்கையால், கரோனா தொற்றின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த25 நாட்களுக்கு முன்பு வரை நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 2000-க்கு மேல் இருந்தது. தற்போது, படிப்படியாககுறைந்து 230-ஆக உள்ளது. ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளபோதும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அப்போதுதான், இந்த கொடிய நோயின் பாதிப்பு முற்றிலுமாக குறையும்.
கரோனா தொற்றால் செயல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துன்பங்களை போக்கவும், வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகளின் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காணவும் நீர்ப்பாசன துறை எனும் புதிய துறையை உருவாக்கி, அதற்கு கட்சியில் மூத்தவரை அமைச்சராக முதல்வர் நியமித்துள்ளார். இதேபோல, பல நல்ல திட்டங்களை தமிழக மக்களுக்காக வரும்காலங்களில் செயல்படுத்த உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெகதீசன், தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.