வழக்குகளை கண்டு அச்சப்பட வேண்டாம்: அதிமுக ஐ.டி. பிரிவு நிர்வாகிகளுக்கு அறிவுரை

வழக்குகளை கண்டு அச்சப்பட வேண்டாம்: அதிமுக ஐ.டி. பிரிவு நிர்வாகிகளுக்கு அறிவுரை

Published on

திமுக அரசு தொடுக்கும் வழக்குகளைக் கண்டு அச்சப்பட வேண்டாம் என அதிமுக தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கு செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அறிவுரை வழங்கினார்.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், மதுராந்தகம் வடக்கு ஒன்றியம், மாமண்டூர் பகுதியில் மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழகங்களின் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

திமுக அரசு, தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆட்சியில் நிலவும் குறைகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பிறகே, அதுகுறித்து சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவு செய்கிறீர்கள். ஆனாலும் அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. எனவே அதிமுக ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் மீது திமுக அரசு பொய் வழக்குகளைப் பதிவு செய்கிறது. அதைக் கண்டு நிர்வாகிகள் யாரும் அச்சப்பட, கவலைப்பட வேண்டாம். இந்த வழக்குகளை கட்சியின் வழக்கறிஞர்கள் பார்த்துக் கொள்வார்கள் என செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வழக்கறிஞர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். கரோனா நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் வழக்கறிஞர்களின் குடும்பத்தாருக்கு ரூ 50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மீது திமுகவினரின் பொய் வழக்குகள் பதிவு செய்வதைக் கண்டித்தும், தகவல் தொழில் நுட்ப அணிக்கு உறுதுணையாக வழக்கறிஞர் அணியினர் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in