Published : 05 Jul 2021 03:13 AM
Last Updated : 05 Jul 2021 03:13 AM

கிழக்கு கடற்கரை சாலையில் 20 கி.மீ. தொலைவு சைக்கிள் பயிற்சி மேற்கொண்ட முதல்வர்: பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சியில் ஈடுபட்டார்.

சென்னை/மாமல்லபுரம்

கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை சுமார் 20 கி.மீ. தொலைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார். அப்போது பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த பல ஆண்டுகளாகவே வாரந்தோறும் கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். கரோனா கட்டுப்பாடுகள், சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி நீலாங்கரை முதல் மாமல்லபுரம் வரை சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார்.

அதன்பிறகு தேர்தல் முடிவுகள் வெளியாகி கடந்த மே 7-ம் தேதி அவர் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு கரோனா 2-வது அலையால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. கரோனா தடுப்புப் பணிகளில் முதல்வர் தீவிரம் காட்டினார்.

இந்நிலையில், நேற்று காலை கிழக்கு கடற்கரைச் சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை நண்பர்கள் சிலருடன் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார். வழிநெடுக காவல் துறையினர் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர்.

சைக்கிள் பயிற்சியின்போது வழியில் பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். மாமல்லபுரம் அருகே சாலையோர தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார். ஏராளமான இளைஞர்களும், பொதுமக்களும் முதல்வர் ஸ்டாலினுடன் செல்ஃபி படம் எடுத்துக் கொண்டனர். சுமார் 20 கி.மீ. சைக்கிள் ஓட்டிச் சென்ற ஸ்டாலின், மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் ஓய்வெடுத்தார். முதல்வர் ஸ்டாலினின் சைக்கிள் பயிற்சி படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

தனியார் ஓட்டலை தவிர்த்திருக்கலாம்

கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி, கடலின் உயர் அலைக் கோட்டு பகுதியில் இருந்து 200 மீட்டர் தூரம் வரை எந்தவித கட்டுமானமும் ஏற்படுத்த அனுமதி இல்லை.

ஆனால் மாமல்லபுரம் கடலோரப் பகுதியில் இயங்கி வரும் இரு தனியார் ஓட்டல்கள் விதிமீறியது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு அமைத்த வல்லுநர் குழு ஆய்வறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த இரு ஓட்டல்களும், விதிகளை மீறி கட்டிய கட்டுமானங்களை அகற்ற வேண்டும். விதிகளை மீறி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதால், அதற்கான இழப்பீடாக ரூ.10 கோடி செலுத்த வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்து இருந்தது.

அந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பசுமை தீர்ப்பாயத்தில் ஓட்டல் நிர்வாகம் தாக்கல் செய்த மனுவையும் அமர்வின் உறுப்பினர்கள் தள்ளுபடி செய்துள்ளனர். இவ்வாறு விதிமீறல் நீரூபிக்கப்பட்ட ஓர் ஓட்டலில், நல்லாட்சி வழங்கி வருவதாக மக்களால் போற்றப்படும் ஒரு முதல்வர் ஓய்வெடுக்க செல்வதை தவிர்த்து இருக்கலாம் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x