

பெட்ரோல், டீசல், எரிவாயு, சமையல் எண்ணெய் விலை ஏற்றத்துக்கு புதுச்சேரி காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 25 சதவீதம் குறைவாக இருக்கின்ற இந்த காலகட்டத்திலும் பாஜக அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி வருகின்றது.
ஒரே ஆண்டில் 43 முறையும், சென்ற ஜூன் மாதத்தில் மட்டும் 16 முறை உயர்த்தியதால் இப்போது பெட்ரோலின் விலை ரூ.100 -ஐ தாண்டிவிட்டது.
இதனால், அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் தாறுமாறாக உயர்ந்துவிட்டன. சமையல் எரி வாயு விலை ரூ.850 ஆகவும், சமையல் எண்ணெய் விலை இரண்டுமடங்குக்கு மேலும் உயர்ந்துவிட் டது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வேலை இழந்து, வருமானம் குறைந்துள்ள இக்காலகட்டத்தில் கூட, மக்களின் கஷ்டத்தை குறித்து சிறிதும் கவலைப்படாமல் விலைகளை ஏற்றுகிறார்கள்.
ஆங்கிலேயர்கள், நம் நாட்டை சுரண்டியதை விடவும், அதிகமாக சுரண்டிக் கொண்டிருக்கும் கார்ப்பரேட்டுகளிடம் நாட்டின் வருமானத் தையும், சொத்துக்களையும் விற்றுக்கொண்டிருக்கிறார் மோடி. இந்த வரியேற்றத்தின் மூலம் ஒரு ஆண்டுக்கு கிடைக்கும் ரூ.2 லட்சம் கோடி நிதியை கொண்டு தனது பெரும் பணக்கார, குஜராத் நண்பர்களின் கடன்களை தள்ளுபடி செய்கிறார். பாஜக அரசின் இந்த மக்கள் விரோத விலையேற்ற நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
உடனடியாக இந்த விலையேற்றத்தை திருப்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி புதுச்சேரி மாநிலத்திலுள்ள பெட்ரோல் பங்குகள் முன்பு வரும் 7-ம் தேதி கையெழுத்து பிரச்சாரம் செய்ய இருக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.