

சிவகங்கை அருகே மேலச்சாலூரில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. பெரும்பாலானோர் முத்தரையர் சமூகத்தினர். 90 சதவீதம் பேர் விவசாயிகள். இங்கிருந்து சிவகங்கை பகுதிக்கு காய்கறிகள் பெருமளவில் அனுப்பப்படுகின்றன.
இவ்வூரில் உள்ள பழமையான 3 அம்மன் கோயில்கள் (பொன்னழகியம்மன், பச்சநாச்சி அம்மன், சருவுடை நாச்சி அம்மன்) குடிசைகளிலேயே உள்ளன. இதனால் அப்பகுதி மக்களும் குடிசைகளிலேயே வசித்தனர். கடந்த 2006-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இவ்வூரில் 400 குடிசை வீடுகள் இருந்தன. தற்போது பெரும்பாலா னோர் கான்கிரீட் வீடுகளை கட்டிவிட்டனர்.
ஆனால் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்றும் குடிசைகளிலேயே வசிக்கின்றனர். அவர்கள் அம்மனுக்காக பழமை மாறாமல் குடிசை வீடுகளிலேயே வசித்து வருகின்றனர். மேலும் ஆட்டுக்கல், அம்மிக்கல், விறகு அடுப்புகளை மட்டுமே அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கேஸ் அடுப்பு பயன்படுத்துவதில்லை.
இதுகுறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த அழகி என்பவர் கூறியதாவது: எங்களை காக்கும் அம்மன்களே குடிசைகளில் இருக்கும்போது, நாங்கள் வசிப்பதில் எந்த சிரமும் இல்லை. அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாக்களுக்கு, தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வருகின்றனர் என்றார்.