Published : 05 Jul 2021 03:14 AM
Last Updated : 05 Jul 2021 03:14 AM

எட்டயபுரம் பேரூராட்சி, நெல்லை பழையபேட்டை பகுதியில் பழுதடைந்த மின்கம்பங்களால் பொதுமக்கள் அச்சம்

எட்டயபுரம் பேரூராட்சி மற்றும் திருநெல்வேலி பழைய பேட்டை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள பழுதான மின்கம்பங்களை அகற்றி விட்டு, புதிய மின்கம்பங்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியு றுத்தி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தேர்வு நிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெருக்களில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளான நிலையில் பெரும்பாலான மின்கம்பங்களில் கீழ் பகுதியில் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.

தற்போது காற்று அதிகமாக வீசும் நிலையில், மின்கம்பங்கள் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது.

பழையபேட்டை

இதுபோல் திருநெல்வேலியில் பழையபேட்டை சர்தார்புரம் சமூக ரெங்கையன் கட்டளை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள மின்கம்பம் கான்கிரீட் பெயர்ந்து, துருப்பிடித்த நிலையில் இரும்புக் கம்பிகள் வெளியே தெரிந்தவாறு எந்நேரத்திலும் விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மிகவும் குறுகலான மற்றும் போக்குவரத்து அதிகம் நிறைந்த தெருக்களில் உள்ள வீடுகளுக்கு இந்த மின்கம்பங்களில் இருந்தே மின் இணைப்பு வயர்கள் செல்கின்றன. மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தால், பெரிய அளவில் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மின் வாரியம் சார்பில் தொடர் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு, பழுதடைந்த மின்கம்பங்கள், வயர்கள் மாற்றப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இதுபோல் பழுதாகி நிற்கும் மின்கம்பங்களையும் உடனடியாக அகற்றி விட்டு, புதிய மின்கம்பங்களை அமைக்க மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x