

கரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளைத் தொடர்ந்து அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இன்று முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதால் தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கரோனா பரவல் குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. வரும் 12-ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (5-ம் தேதி) முதல் அனைத்து மாவட்டங்களிலும் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படு த்தும் பணிகள் நேற்று நடைபெற்றது. திருநெல்வேலியில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் உத்தரவின்படி, சுகாதார அலுவலர் முருகேசன் மேற்பார்வையில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி யில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்ட னர். தென்காசி காசி விஸ்வநாதர் கோயில், சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயில் உட்பட திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து கோயில்களிலும் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
இதுபோல், பள்ளிவாசல்கள், தேவாலயங்களையும் சுத்தப் படுத்தி, தயார்படுத்தும் பணி நடைபெற்றது. வழிபாட்டு தலங்களுக்குச் செல்வோர் தனிமனித இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நாகராஜா கோயில் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களை இன்று காலை 5.30 மணிக்கே திறந்து பூஜைகள் நடத்தப்படுகிறது. இதையொட்டி நேற்று நாகராஜா கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், வேளிமலை குமாரசுவாமி கோயில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது. இதுபோல் கோட்டாறு சவேரியார் ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள், வடசேரி பள்ளிவாசல் உட்பட அனைத்து பள்ளிவாசல்கள், தர்காக்களை மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தினர்.
மேலும் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் வழிபடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் நாகராஜா கோயிலில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றி வழிபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.