

திருவண்ணாமலை அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள பொன்னு சாமி நகரில் தனியார் நிறுவனம் மூலம் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். செல்போன் டவர் அமைப்பதற்காக போடப்பட்டுள்ள கான்கிரீட் கட்டைகள் மீது அமர்ந்து பெண்கள் உட்பட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, தர்ணாவில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, “செல்போன் டவர் அமைத்தால், கதிர்வீச்சின் தாக்கம் இருக்கும். இதனால், எங்கள் பகுதியில் வசிப்பவர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே, செல்போன் டவர் அமைக்கும் பணியை ஆட்சியர் தடுத்து நிறுத்த வேண்டும்” என்றனர்.
செல்போன் டவர் பிரச்சினை குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என காவல் துறையினர் பதிலளித்தனர். இதையடுத்து, தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது.