Last Updated : 04 Jul, 2021 08:05 PM

 

Published : 04 Jul 2021 08:05 PM
Last Updated : 04 Jul 2021 08:05 PM

நீண்ட நாட்களுக்குப் பின் வேலூர் மீன் மார்க்கெட் திறப்பு: இடைவெளியின்றிக் குவிந்த மீன் பிரியர்கள்

வேலூர் மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்க சமூக இடைவெளியின்றிக் குவிந்த பொதுமக்கள் | படம்: வி.எம். மணிநாதன்.

வேலூர்

வேலூர் மீன் மார்க்கெட் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டதால், சமூக இடைவெளியின்றியும், முகக்கவசம் அணியாமலும் பலர் மீன்களை வாங்க ஒன்றாகக் குவிந்தனர். இதனால் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

வேலூர் - பெங்களூரு சாலையில் கோட்டை அகழி எதிரே புதிய மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன.

நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 80 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் 100 முதல் 150 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், கரோனா பரவல் காரணமாகக் கடந்த சில வாரங்களாக இறைச்சி மற்றும் மீன் விற்பனைக்குத் தமிழக அரசு தடை விதித்திருந்தது. இதனால், வேலூர் மீன் மார்க்கெட் மூடப்பட்டது. அதன்பிறகு கரோனா பரவல் படிப்படியாகக் குறையத் தொடங்கியுடன், மீன்கள் மொத்த வியாபாரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கடந்த 3 வாரங்களாக மீன் மார்க்கெட்டுக்கு வெளியே மொத்த வியாபாரம் மட்டும் நடைபெற்று வந்தது. வேலூர் மக்கான் பகுதியில் உள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்தில் மீன் சில்லறை வியாபாரம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்த மாவட்டங்களில் போக்குவரத்து சேவை கடந்த 28-ம் தேதி தொடங்கியது.

வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை தொடங்கப்பட்டதால் மக்கான் பகுதியில் உள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவை தொடங்கியது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த சில்லறை மீன் வியாபாரம் அகற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் ஜூலை 5-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ளதால் வேலூர் மீன் மார்க்கெட்டில் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் இன்று தொடங்கியது. இதனால், மகிழ்ச்சியடைந்த மீன் பிரியர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் மீன்களை வாங்க இன்று ஒரே இடத்தில் சமூக இடைவெளியை மறந்து கூட்டம் கூட்டமாகக் குவிந்தனர்.

மீன் வியாபாரிகளும், மீன் வாங்க வந்தவர்களும் ஒரே இடத்தில் தனிமனித இடைவெளியை மறந்து வியாபாரத்தில் மூழ்கியதால் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் இங்கு ஆய்வு நடத்தி, விதிமுறைகளை மீறும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன்கள் விலை கிடுகிடுவென உயர்வு

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீன் மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளதால் மீன்கள் விலையும் கடந்த வாரத்தைக் காட்டிலும் இன்று உயர்ந்து காணப்பட்டது.

இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறும்போது, ''கேரளாவில் தற்போது மீன்பிடித் தடைக்காலம் இருப்பதால் இங்கிருந்து கேரளாவுக்கு மீன்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தவிர, பேருந்து சேவை தொடங்கியுள்ளதால் திருப்பத்தூர், தி.மலை, ராணிப்பேட்டை போன்ற பகுதிகளுக்கு மீன்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் வேலூரில் மீன்கள் விலை உயர்ந்துள்ளது'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x