Published : 04 Jul 2021 04:35 PM
Last Updated : 04 Jul 2021 04:35 PM

தீபாவளிக்கு 1.5 டன் ஆவின் இனிப்புகளை வீட்டுக்கு எடுத்துச் சென்ற ராஜேந்திரபாலாஜி: அமைச்சர் நாசர் குற்றச்சாட்டு

சென்னை

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தீபாவளி அன்று தனது வீட்டுக்கு 1.5 டன் ஆவின் இனிப்புகளை இலவசமாக எடுத்துச் சென்றதாகப் பால்வளத்துறை அமைச்சர் நாசர் குற்றம் சாட்டியுள்ளார்

பால்வளத்துறை அமைச்சர் நாசர் சேலத்தில் ஆவின் பால் பண்ணையை இன்று அதிகாலையில் மாவட்ட ஆட்சியருடன் சென்று பார்வையிட்டார். பால் உற்பத்தி மற்றும் விற்பனையைக் கூட்டுவது குறித்து ஆய்வு நடத்தினார். சாலைகளில் உள்ள ஆவின் விற்பனையகங்களுக்கு நேரடியாகச் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

“ராஜேந்திரபாலாஜி வீட்டுக்கு தீபாவளி அன்று 1.5 டன் அளவுக்கு தீபாவளி இனிப்புகளை இலவசமாகக் கொடுத்து அனுப்பியுள்ளார். நிர்வாகத்திலிருந்து 1.5 டன் அளவுக்கு இலவசமாக அனுப்பி வைத்துள்ளார். அதற்கு ஒரு தொகையும் இதுவரை வரவில்லை. ஆதாரத்துடன் எங்களிடம் உள்ளது. அதன்மேல் நடவடிக்கை எடுப்போம், விடமாட்டோம்.

இங்கிருந்து போனதற்கு அனைத்து ரசீதுகளும் உள்ளன. பணம் எதுவும் வரவில்லை. வெளியே போனதற்கு மட்டும் ஆவணங்கள் உள்ளன. கடந்த ஆட்சியில் ஆவின் நிர்வாகத்தில் நடந்த முறைகேடான பணி நியமனம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக விசாரணை நடந்து வருகிறது.

இறுதியில் இறுதி முடிவு வரும்போது முதல்வர் கவனத்திற்குக் கொண்டுசென்று அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் இந்த ஆட்சியில் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். அதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை”.

இவ்வாறு அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x