

உடுமலை அருகே பொன்னாலம்மன் சோலையில் பல கோடி ரூபாய் மதிப்புடைய அரசுக்குச் சொந்தமான 300 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும் அவை அகற்றப்படாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
உடுமலைப்பேட்டை அடுத்துள்ள திருமூர்த்தி மலை பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாய நிலம் உள்ளது. தவறாமல் பெய்யும் பருவ மழையால் இப்பகுதி இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாகவும், சுற்றுச்சூழல் மாசடையாத இடமாகவும் திகழ்கிறது.
காண்டூர் கால்வாய், திருமூர்த்தி அணை ஆகியவை இருப்பதால் அந்தப் பகுதியில் எப்போதும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருப்பதோடு, வேளாண் கிணறுகளும் நிரம்பிக் காணப்படும். அதனால் அப்பகுதியில் பணப் பயிராகக் கருதப்படும் தென்னையை அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர்.
இப்பகுதியில் உள்ள பொன்னாலம்மன் சோலை பெயருக்கு ஏற்பச் சோலையாகவே திகழ்கிறது. அங்கு நூற்றுக்கணக்கான விவசாயிகள் தென்னை, மா, வாழை, கொய்யா, அத்தி, முருங்கை, பருத்தி, தக்காளி, கத்தரி, வெண்டை எனப் பலவகையான பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு விவசாயிகளின் நிலங்களுக்கு நடுவே அரசுக்குச் சொந்தமான நிலமும் உள்ளது. அவை காலப்போக்கில் வருவாய்த்துறையின் கண்காணிப்பு இல்லாததால் பலராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் விவசாயிகள் சிலர் புறம்போக்கு நிலத்தின் வழியாகப் பாதை அமைக்க வேண்டும் என ஆட்சியர், வட்டாட்சியருக்குக் கோரிக்கை மனு அளித்தனர்.
விவசாயிகள் பாதை கோரும் இடம் அரசியல் பிரமுகர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனால் நிலத்தை அளவீடு செய்வதற்காகச் செல்லும் அதிகாரிகளை ஆக்கிரமிப்பாளர்கள் விரட்டுவதும், அளவீடு செய்த கற்களைப் பிடுங்கி எறிவதுமான போக்கு அங்கு நிகழ்ந்து வருகிறது. பதவியில் இருக்கும் அரசியல் பிரமுகர்களின் தலையீடு காரணமாக அதிகாரிகளும் தொடர்ந்து மவுனம் காத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அங்கு அரசு நிலத்தை அளவீடு செய்வதற்காக வட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் சென்றனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் திரும்பினர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் கூறும்போது, ''நாங்கள் பல ஆண்டுகளாகப் பாதை வசதி இன்றி வசித்து வருகிறோம். அரசியல் செல்வாக்கு மூலம் எங்களது கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது. இதே பகுதியில் அரசுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான 300 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகார் மீது வருவாய்த் துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதை வசதிக்குத் தேவையான இடத்தைக் கையகப்படுத்தவும் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆட்சியரிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதி இன்றி பல்வேறு முறைகேடுகள் இப்பகுதியில் அரங்கேறி வருகின்றன. இவை அனைத்துமே கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர், கோட்டாட்சியர் ஆகியோருக்குத் தெரிந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை'' என்று தெரிவித்தார்.
இதுகுறித்து வட்டாட்சியர் ராமலிங்கம் கூறும்போது, ''பொன்னாலம்மன் சோலையில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பது உண்மைதான். பாதை கோரிய கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று நிலத்தை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. விரைவில் இப்பணி முடிவடைந்து அரசு நிலம் கையகப்படுத்தப்படும்'' என்று தெரிவித்தார்.