Published : 04 Jul 2021 03:52 PM
Last Updated : 04 Jul 2021 03:52 PM

சுதந்திரக் காற்றைச் சுவாசித்த சங்கர் யானை: 141 நாட்களுக்குப் பின்னர் கூண்டிலிருந்து விடுதலை

முதுமலை

முதுமலையில் மரக்கூண்டில் சிறைப்பட்டிருந்த ‘சங்கர்’ யானை இன்று மரக்கூண்டிலிருந்து விடுதலை பெற்று, வெளியே அழைத்து வரப்பட்டது. சுதந்திரக் காற்றைச் சுவாசித்ததும் மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடியது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தந்தை, மகன் உட்பட மூன்று பேரைக் கொன்ற காட்டு யானை சங்கர். வனத்துறையினர் இந்த யானையைப் பிடிக்க முயன்றனர். அப்போது மயக்க ஊசியும் செலுத்தினர். ஆனால், மயக்க ஊசியுடனேயே பிற காட்டு யானைகளுடன் சேர்ந்து, கேரள வனத்துக்குச் சென்று மறைந்தது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக வனத்துறையினருக்குப் போக்குக் காட்டி வந்த காட்டு யானை சங்கர் மீண்டும் நீலகிரி மாவட்ட வனத்துக்குத் திரும்பியதும், கடந்த பிப்ரவரி 12-ம் தேதி பிடிபட்டது. பிடிபட்ட நாள் முதல் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அபயரண்யம் பகுதியில் அமைக்கப்பட்ட மரக்கூண்டில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் ஆக்ரோஷமாகக் காணப்பட்ட யானை, பின்பு பாகன்களின் கட்டளைக்கு இணங்கி வந்தது. இதனால், 141 நாட்கள் சிறை வாசத்துக்குப் பின்னர் சங்கருக்கு இன்று விடுதலை கிட்டியது. அபயரணத்தில் இருந்த மரக்கூண்டிலிருந்து சங்கர் வெளியே அழைத்து வரப்பட்டது. கள இயக்குநர் கே.கே.கவுசல், துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் மற்றும் வனத்துறையினர் முன்னிலையில், பூஜை செய்த பின்னர் கூண்டிலிருந்து யானை வெளியே அழைத்து வரப்பட்டது.

பாகன்கள் விக்ரம், சோமன் யானைக்குக் கரும்பு கொடுத்து, அதை ஆசுவாசப்படுத்தி கூண்டிலிருந்து வெளியே அழைத்து வந்தனர். ஆரம்பத்தில் பெரும் தயக்கத்துடன் கூண்டிலேயே நின்ற யானை, பின்னர் பாகன்கள் நீட்டிய குச்சியைப் பிடித்து மெல்ல அடி மேல் அடியெடுத்து வைத்து வெளியே வந்தது. பாதுகாப்புக்காக கும்கிகள் சுற்றிலும் நிற்க, சங்கர் யானையை அங்குள்ள மரத்தில் சங்கிலியால் கட்டி வைத்து, வனத்துறையினர் தொலைவுக்குச் சென்றனர்.

141 நாட்களாக மரக்கூண்டில் அகப்பட்ட யானை, மெல்லத் தனது கால்களை நீட்டியும், துதிக்கையை உயர்த்தியும் சுதந்திரக் காற்றைச் சுவாசித்தது. மெல்லத் தரையில் படிந்திருந்த மண்ணை ஆனந்தமாக, தனது தலை மேலே போட்டுக்கொண்டது. தாவரங்களையும், புற்களையும் அள்ளியெடுத்து வாயில் போட்டுக்கொண்டது. அதன் கண்களில் மகிழ்ச்சி கரைபுரண்டோடியது. மூன்று பேரைக் கொன்ற மூர்க்கமான யானையா இது என அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் குழந்தை போல ஆனந்தக் கூத்தாடியது.

கும்கியாக மாற்றப்படும்

முதுமலை புலிகள் காப்பகக் கள இயக்குநர் கே.கே.கவுசல் கூறும்போது, ''முதுமலை வளர்ப்பு யானை முகாமில் 27 யானைகள் இருந்தன. சங்கர், ரிவால்டோ மற்றும் கூடலூரில் பிடிபட்ட யானையுடன் இந்த எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மூன்று பேரைக் கொன்ற சங்கர் யானை, கும்கிகள் உதவியுடன், மயக்க ஊசி செலுத்தி தமிழ்நாடு- கேரள எல்லையில் பிடிக்கப்பட்டது. அபயரண்யத்தில் 141 நாட்கள் மரக்கூண்டில் இருந்தது. யானையைப் பராமரிக்க 2 பாகன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாகன்களின் கட்டளைகளை யானை புரிந்துகொண்டு செயல்பட்டு வருகிறது. இதனால், கூண்டிலிருந்து வெளியேற்றப்பட்டது. யானைக்குப் பெயர் வைக்க, முதல்வருக்குப் பெயர்கள் பரிந்துரைக்கப்படும். முதல்வர் பெயர் வைப்பார். சங்கருக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு கும்கியாக மாற்றப்பட்டு, யானை பிரச்சினைகளைக் கையாளப் பயன்படுத்தப்படும்'' என்று தெரிவித்தார்.

எளிதில் புரிந்து நடந்துகொண்டது

சங்கரைப் பராமரிக்கும் பாகன் விக்ரம் கூறும்போது, ''நான் கும்கி யானைகள் பராமரிப்பில் ஈடுபட்டு வந்தேன். திருவண்ணாமலையில் 6 காட்டு யானைகளைப் பிடிக்கும் பணியில் நான் இருந்தேன். இதனால், சங்கர் பிடிபட்டதும், அதைப் பராமரிக்கும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. யானைக்குப் பயிற்சி அளிக்கக் கூறினர். இதற்கு 6 மாத காலம் ஆகும் எனக் கூறினேன்.

கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு வாரம் யானை மூர்க்கத்தனமாக இருந்தது. மெல்ல எங்களிடம் பழகத் தொடங்கி, கட்டளைகளை ஏற்கத் தொடங்கியது. கட்டளைகளைச் சீக்கிரம் புரிந்துகொண்டு ஒத்துழைத்தது. இதனால் 4 வாரங்களிலேயே கூண்டிலிருந்து வெளியே கொண்டுவரும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு வார காலம் யானையை ஓய்வாக விட்டுவிட்டு, பின்னர் யானைகளுக்கான மரங்கள் தூக்குவது போன்ற பயிற்சி அளிக்கப்படும். பின்னர் கும்கிக்கான பயிற்சி வழங்கப்படும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x