Published : 04 Jul 2021 02:16 PM
Last Updated : 04 Jul 2021 02:16 PM

அதிமுக தொண்டர்கள் மீது வழக்கு, கைது; அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்: எடப்பாடி பழனிசாமி 

சென்னை

“தமிழக மக்கள் நலனில் அக்கறை கொள்வதை விடுத்து, பொய் வழக்கு தொடுப்பதில் நாட்டம் செலுத்திவரும் திமுக அரசு, இத்தகைய மக்கள் விரோதப் போக்கை, ஜனநாயகத்திற்கு எதிராகச் செயல்படுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும், அதிமுக அடக்குமுறைகளைச் சட்ட ரீதியாகச் சந்திக்கும் வல்லமை உள்ள கட்சி” என எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கை

சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சியாளர்களின் சொல் வேறு, செயல் வேறாக உள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், அதிமுக அரசைத் தரக்குறைவாக விமர்சித்ததற்காகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்துள்ளார்.

மாற்றாரை எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து விமர்சித்தாலும், அது கருத்துச் சுதந்திரம். அதுவே தங்கள் ஆட்சியையும், தங்கள் கட்சியினரையும், சமூக வலைதளங்களில் நாகரிகமாக விமர்சித்தாலே, அதனை மாபெரும் குற்றமாகக் கருதி, தனக்குக் கீழ் உள்ள காவல் துறையினரை ஏவி வழக்குத் தொடுப்பது, கட்சியினரை விட்டு மிரட்டுவது போன்ற திமுகவினருக்கே உரித்தான, அடிப்படையான செயல்களைப் பார்க்கும்போது, திமுகவினர் இன்னும் மாறவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் "எங்களுக்கு வாக்களித்தோருக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் நடுநிலையாக இருந்து செயலாற்றுவோம்" என்றார். திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக நிறைவேற்றுவோம், முதல் கையெழுத்திடுவோம் என்று கூறிய பல முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதையும், திமுக அரசு மற்றும் அமைச்சர்களாக உள்ளவர்களின் செயல்பாடுகளை நியாயமான முறையில் சமூக வலைதளங்களுக்கே உரிய கருத்துச் சுதந்திரத்தின்படி, மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகளை, காவல் துறையை வைத்து, இந்த அரசைத் தரக்குறைவாக விமர்சிப்பதாகக் கூறி வழக்குப் பதிவு செய்கிறார்கள்.

இவ்வாறு, செய்தி தொலைக்காட்சி உட்பட, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், சுமார் 120 கட்சி உறுப்பினர்களிடம், சமூக வலைதளங்களில் பதிவிட்ட உங்கள் பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும், இல்லையெனில் உங்கள் மீது வழக்குத் தொடுக்கப்படும் என்று மிரட்டி வருகிறார்கள்.

மேலும், இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, திமுகவின் நடவடிக்கைகளை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதியப்பட்ட கருத்துகளுக்காகவும் இப்போது வழக்குப் போடப்படுகிறது. அப்போதே சட்ட நடவடிக்கை எடுக்காமல், இப்போது ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது என்று நினைப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழக மக்கள் நலனில் அக்கறை கொள்வதை விடுத்து, பொய் வழக்குத் தொடுப்பதில் நாட்டம் செலுத்திவரும் திமுக அரசு இத்தகைய மக்கள் விரோதப் போக்கை, ஜனநாயகத்திற்கு எதிராகச் செயல்படுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதுபோன்ற செயல்களால் அதிமுகவையும், அதன் ஒன்றரைக் கோடித் தொண்டர்களையும் அடக்கி, ஒடுக்கி, ஒழித்துவிடலாம் என்று திமுக ஆட்சியாளர்கள் கருதினால் அது பகல் கனவாகவே முடியும். முதல்வராக இருந்த என் மீதும், அமைச்சர்கள் மீதும், கட்சி நிர்வாகிகள் மீதும், மிகமிகக் கேவலமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும், நரகல் நடையிலும், நாராசாரமாகவும், திமுகவின் தலைமை முதல் கடைசி பேச்சாளர்கள் வரை கடந்த பல ஆண்டுகளாக அவதூறு பரப்பி வந்ததை மக்கள் அறிவார்கள்.

இதனால் மன உளைச்சல் அடைந்தவர்கள், உரிய நீதிமன்றங்களில் அவதூறு வழக்கு தொடர்ந்தால், எங்களின் பேச்சுரிமையில், எழுத்துரிமையில், கருத்துரிமையில் அரசு தலையிடலாமா என்றெல்லாம் உரக்கக் கூச்சலிட்டனர். அந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்யும்படி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதிமுக நெருப்பில் பூத்த மலர். தொண்டர்கள், இயக்கம் காக்க சர்வபரி தியாகத்தையும் செய்யக் கூடியவர்கள்.

"அஞ்சுவது யாதொன்றுமில்லை - அஞ்ச வருவதுமில்லை" என்று, எங்களைத் தீய சக்திகளிடம் இருந்து காத்து நின்ற எங்கள் தலைவியின் வைர வரிகளை நெஞ்சில் ஏந்தி நிற்கும் வீர மறவர்கள் நாங்கள். திமுகவினர், தங்களுக்குள்ள அத்தனை உரிமைகளும் மற்றவர்களுக்கும் உண்டு என்பதை வசதியாக மறந்துவிட்டு, தற்போது ஆட்சி அதிகாரம் கைக்கு வந்துவிட்டது என்று காவல் துறையின் மூலம் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்டு, தற்போது கட்சித் தொண்டர்களால் எஃகுக் கோட்டையாகப் பாதுகாக்கப்படும் கட்சிக்கு எதிரான அடக்கு முறையை, உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

திமுக அரசின் இந்த அடக்குமுறையினையும், பொய் வழக்குகளையும் சட்ட ரீதியாகச் சந்திக்கக்கூடிய வல்லமை அதிமுகவிற்கும், அதன் சட்டப் பிரிவிற்கும் உண்டு என்பதை இந்த ஆட்சியாளர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x