

தமிழக முதல்வர் ஸ்டாலின் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வார் என மக்கள் சபை நிகழ்ச்சியில் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கரூர் சட்டப்பேரவைத் தொகுதி மக்களைச் சந்தித்து மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மனுக்கள் பெறும் மக்கள் சபை நிகழ்ச்சி, கரூர் நகராட்சி 2-வது வார்டு பெரியகுளத்துப் பாளையத்தில் கடந்த வாரம் தொடங்கியது. 2-வது வாரமாக கரூர் நகராட்சி 1-வது வார்டு கோதூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் இன்று (ஜூலை 4-ம் தேதி) மக்கள் சபைக்கூட்டம் நடைபெற்றது.
மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு கூறும்போது, ''தமிழக முதல்வர் ஸ்டாலின் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வார். ஜூன் 3-ம் தேதி கரோனா நிவாரணமாக ரூ.4,000 வழங்கப்படும் என்றார். ஆனால், மே மாதமே முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்பட்டது. ஜூன் 3-ம் தேதி 2-வது தவணை வழங்கப்பட்டது. இவற்றுடன், தான் முன்பே சொல்லாத 14 மளிகைப் பொருட்கள் தொகுப்பையும் வழங்கினார். முதல்வரிடம் கூறி கரூர் நகராட்சி நிகழாண்டிலேயே மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும்'' என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, கரூர் நகராட்சி 28-வது வார்டு வேலுசாமிபுரத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்ற அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''மாவட்டத்தில் கரூர் நகராட்சியில் உள்ள 43 வார்டுகளில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து குளித்தலை நகராட்சி, 11 பேரூராட்சிகள், 157 ஊராட்சிகளில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படும்.
கடந்த வாரம் 4,000க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அவை துறைவாரியாகப் பிரிக்கப்பட்டு நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கைத்தறி, கொசுவலை, பேருந்து கூண்டு கட்டும் தொழிலுக்கு சிறப்பு பெற்ற கரூர் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும். மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் கரூர் மாவட்டத்திற்கு வழங்குவார்'' என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், கரூர் கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், கரூர் நகராட்சி ஆணையர் கே.எம்.சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.