Published : 04 Jul 2021 12:14 PM
Last Updated : 04 Jul 2021 12:14 PM

டெங்கு கொசு பரவல்; தண்ணீர் தேங்கும் பொருட்களை அகற்றவும்: சென்னை மாநகராட்சி வேண்டுகோள்

சென்னை

பொதுமக்கள் தங்களின் வீடுகளில் தண்ணீர் மற்றும் மழைநீர் தேங்கா வண்ணம் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி கொசுக்களை ஒழிக்க மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் வைத்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது கொசு ஒழிப்புப் பணிக்கென 1262 நிரந்தர கொசு ஒழிப்புப் பணியாளர்களும், 2359 ஒப்பந்தப் பணியாளர்களும் என மொத்தம் 3621 பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

சென்னை மாநகரில் உள்ள பகுதிகள் 500 வீடுகள் கொண்ட சிறு வட்டங்களாக (Sector) பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டத்திற்குட்பட்ட தெருக்களில் வாரந்தோறும் கொசுப் புழு வளரிடங்களான மேல்நிலை/ கீழ்நிலை தொட்டி, கிணறு, டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற தேவையற்ற பொருட்களைக் கண்டறிந்து கொசுப் புழுக்கள் இருப்பின் அதனை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் 256 கைத்தெளிப்பான்கள் மற்றும் 167 அதிவேக திறன் கொண்ட கைத்தெளிப்பான்களைக் கொண்டு குடிசைப் பகுதிகள், பள்ளிகள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் திறந்தவெளிக் கால்வாய்களிலும் கொசுப் புழு அழிக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டு, கொசுப் புழுக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. நீர்நிலைகளில் கொசுப் புழுக்களை உண்ணும் கம்பூஃசியா என்னும் மீன்கள் விடப்பட்டு கொசுப் புழுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

வாகனத்தில் எடுத்துச்செல்லும் 68 புகை பரப்பும் இயந்திரங்கள், கையினால் எடுத்துச்செல்லும் 287 புகை பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 12 சிறிய வகை புகை பரப்பும் இயந்திரங்களைக் கொண்டு முதிர் கொசுக்கள் கட்டுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், நீர்வழித்தடங்களில் பணியாளர்களின் பாதுகாப்பு கருதி மனித ஆற்றல் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கவும் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் தற்பொழுது சென்னை மாநகராட்சியின் சார்பில் ட்ரோன் மூலம் சோதனை முறையில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

எனவே பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்கி கொசுப் புழு உருவாகும் வாய்ப்புள்ள டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உபயோகமற்ற பொருட்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள் முதலியவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், கிணறு, மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, தண்ணீர் தொட்டிகள் முதலியவற்றை கொசுக்கள் மற்றும் கொசுப் புழு புகாவண்ணம் மூடிவைக்க வேண்டும்.

தண்ணீர் நிரப்பிய பூ ஜாடி மற்றும் கீழ்த்தட்டு, குளிர்பதனப் பெட்டியின் கீழ்த்தட்டு, மணிபிளான்ட் போன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை வாரமொருமுறை அகற்றி தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரித்து மாநகரட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x