

மக்களுக்கு நியாயவிலைக் கடைகளில் தங்கு தடையின்றி தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் குடும்ப அட்டை வழங்குதல், உணவுப் பொருட்கள் விநியோகம், கரோனா காலத்தில் நிவாரணம், உணவுப் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.
இதில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, தலைமைச் செயலர்இறையன்பு, நிதித் துறை செயலர் ச.கிருஷ்ணன், உணவுத் துறை செயலர் முகமது நசிமுதீன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதையும், தரமான பொருட்கள் வழங்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும். குடும்ப அட்டை கோரி விண்ணப்பம் செய்பவர்களுக்கு தாமதமின்றி அட்டை வழங்க வேண்டும்.
பொது விநியோகத் திட்டத்தை முழுமையாக கணினிமயமாக்கி, பல துறைகள் மூலம் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளை ஒரே துறையின் கீழ் கொண்டுவர வேண்டும். வாடகை கட்டிடங்களில் செயல்படும் கடைகளுக்கு சொந்த கட்டிடம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். பெண்பணியாளர்களுக்கான அடிப்படைவசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்துவதுடன், அத்தியாவசியப் பொருட்கள், நெல் ஆகியவற்றை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதை இணைய வழியில் கண்காணிக்க வேண்டும்.
கரோனா தொற்று காலத்தில் கடன் உதவி கோரும் சுயஉதவிக் குழுக்கள், சிறு வணிகர்கள், மாற்றுத் திறனாளிகள், மகளிர் தொழில் முனைவோர் உள்ளிட்டோரின் வாழ்வாதாரத்தை உயர்த்த, கூட்டுறவுசங்கங்கள் மூலம் தகுதியானவர்களுக்கு கடன் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்களுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயக் கடன், நகைக் கடன் வழங்குதல், மானிய விலையில் உரம், விவசாய இடுபொருட்கள் வழங்குதல் போன்றவற்றை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்தும்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.