Published : 04 Jul 2021 03:12 AM
Last Updated : 04 Jul 2021 03:12 AM

மின்வாரியத்துக்கு ரூ.1.59 லட்சம் கோடி கடன் சுமை; கடந்த ஆட்சியில் ஏற்பட்டது இழப்பு அல்ல ஊழல்: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

இதுவரையில் மின்வாரியத்துக்கு ரூ.1.59 லட்சம் கோடி கடன் சுமைஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் மின்வாரியத்துக்கு ஏற்பட்டது இழப்பு அல்ல; ஊழல் நடந்துள்ளது என மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

விழுப்புரம் மண்டலத்துக்கு உட்பட்ட கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட மின்வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் மின் விநியோகம் மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது.

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்து, மின்வாரியம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:

நமக்கான மின் தேவையில் 3-ல் 1 பங்கை தமிழக அரசு பூர்த்தி செய்கிறது. மற்றொரு பங்கை மத்திய அரசிடமும், மீதியுள்ள ஒரு பங்கை தனியாரிடமும் பெற்று விநியோகம் செய்து வருகிறோம்.2006 -11 காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட மின் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் அப்படியே உள்ளன. 2008-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 3 திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளன.

மின்வாரிய நிர்வாகத் துறையின் திறமையின்மையால், வாரியம் பல்வேறு இழப்புகளை சந்தித்துள்ளது. இதனால் மின்வாரியத்துக்கு ரூ.1.59 லட்சம் கோடி கடன் சுமை ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வட்டித் தொகை செலுத்தி வருகிறது. இந்நிலையை மாற்ற ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானதாகும். அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

மாயத்தோற்றம்

கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் ‘மின்மிகை மாநிலம்’ என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி வந்தார்கள். குறைந்த விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யும் சூழல் இருந்தும், அதிக விலைக்கு கொள்முதல் செய்தனர். இதனால் மின்வாரியத்துக்கு இழப்பு ஏற்பட்டது. இதனை இழப்பு என்று சொல்ல மாட்டேன். ஊழல் என்று குற்றம்சாட்டுகிறேன்.

சில இடங்களில் ஒரு யூனிட் ரூ.7-க்கும், ரூ.9-க்கும் வாாங்கப்பட்டுள்ளது. இந்நிலையை மாற்றவேண்டும். குறைந்தபட்சம் 9.6%, அதிகபட்சம் 13% வட்டி செலுத்தி வந்தனர். இந்த ஆண்டு வட்டி செலுத்துவதில் ரூ.2 ஆயிரம் கோடியை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சேமிப்பை உருவாக்க மின்வாரியம் செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆட்சியில் 9 மாதங்கள் மின்வாரியத்தில் பராமரிப்புப் பணிகள் செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு 10 நாட்களில் மின்வாரியம் எடுத்துக் கொண்ட 2.28 லட்சம் பணிகளில், 2.70 லட்சம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. திட்டமிட்ட பணிகளில் 42 ஆயிரம் பணிகள் கூடுதலாக முடிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மண்டலத்தில் கூடுதலாக 2 ஆயிரம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மின் நுகர்வோரிடம் பரிவாக நடந்து கொள்ள வேண்டும். மாவட்டத்துக்கு மாவட்டம் வேறு எண் தந்ததை ஒருங்கிணைத்து ’மின்னகத்தின்’ ஒரே எண் (94987 94987) என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின் நுகர்வோர் தெரிவித்த 56,217 குறைகளில் 10 நாட்களில் 51,512 குறைகள் தீர்த்து வைக்கப்பட்டுஉள்ளன. அதாவது, 91 சதவீத குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

கடந்த ஆட்சியில் ‘விஷன் 2023’ என்ற திட்டத்துக்கு ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. அதில் மின்வாரியத்துக்கு மட்டும் ரூ.4.50 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இதில், எதையும் செயல்படுத்தவில்லை. வட்டிக்கு வாங்கி வட்டி கட்டியுள்ளனர். எந்த இடங்களிலும் புதிய திட்டங்களை கடந்த அரசு செய்யவில்லை.

மின் தடைக்கு தமிழகத்தில் வாய்ப்பே இல்லை என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். மின்வாரியத்தில் பிரிவு வாரியாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் மின் ஆளுமைக்கான விருது வழங்க வேண்டும் என்பதை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் பி லக்கானி, எம்பிக்கள் கவுதம சிகாமணி, ரவிக்குமார், அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி, மணிகண்ணன், சிவகுமார், கிரி, உதயசூரியன் மற்றும் விழுப்புரம் ஆட்சியர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x