

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொன்னம்பலத்தான்பட்டியைச் சேர்ந்தவர் நித்யா (27). பஞ்சாலையில் பணிபுரிந்து வந்த இவருக்கும், வளநாடு அருகே உள்ள வரதக்கோன்பட்டியைச் சேர்ந்த முருகேசனுக்கும் திருமணமாகி 9 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு நல்லக்கண்ணு (9), ரோகித் (5) என 2 குழந்தைகள் இருந்தனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நித்யா தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் இவர் தனது கணவர் வீட்டுக்குச் சென்று வந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்பு மன உளைச்சலில் இருந்த நித்யா, தனது 2 குழந்தைகளுக்கும் எலி மருந்து கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளார். இதையறிந்த அவரது குடும்பத்தினர் மூவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நித்யா நேற்று முன்தினம் இரவு இறந்தார். அதைத் தொடர்ந்து ரோகித், நல்லக்கண்ணு ஆகிய இருவரும் நள்ளிரவில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதுகுறித்து நித்யாவின் தந்தை சாமிக்கண்ணு அளித்த புகாரின்பேரில் மணப்பாறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3 பேரின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாகவே இவர்களது மரணம் நிகழ்ந்தததாக தெரிய வந்துள்ளதால் கணவர் குடும்பத்தினரிடமும் விசாரணை நடக்கிறது.