

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் வழக்கமான மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 7-ம் தேதி தமிழக முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார். அந்த சமயத்தில் கரோனா 2-ம் அலை பரவல் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனால் பதவியேற்ற நாள்முதல், முதல்வர் மு.க.ஸ்டாலினும் அமைச்சர்களும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
தற்போது கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. ஊரடங்கிலும் தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 6.50 மணிக்கு வந்தார். பரிசோதனைகளை முடித்துக் கொண்டு 9 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
வழக்கமான பரிசோதனை
இதுதொடர்பாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழக்கமான உடல் பரிசோதனை நடைபெற்றது. அவருக்கு ஆண்டுக்கு 2 முறை இதுபோன்ற பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை முடிந்ததும் அவர் வீட்டுக்கு சென்றார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.