

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தனது குடும்பத்தினருடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
கரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபடவும், உலக நன்மைக்காகவும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில், லலிதா சகஸ்ரநாம சிறப்பு ஹோமம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பொதுமக்கள் தங்கள் பாதுகாப்புக்காக முகக்கவசம் அணிவதுடன் தனி மனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். நிரந்தர பாதுகாப்புக்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதே எனது அன்பு வேண்டுகோள்.
பொது முடக்கம் முடிந்து கோயில்கள் எப்போது திறக்கப்படும் என்று ஆவலுடன் காத்திருந்தேன். தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோயில்கள் திறந்தவுடன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்துள்ளேன். மூன்றாவது அலை வந்து, எந்த உயிரிழப்பும் ஏற்படக் கூடாது என்று காமாட்சி அம்மனை வேண்டிக் கொண்டேன் என்றார்.
மேலும், “புதுச்சேரியில் 45 சதவீதத்துக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 3-வது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்.புதுச்சேரி மக்களின் நலன் கருதியே ஹெல்மெட் இல்லாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. முகக்கவசம் அணிய பழகிக் கொண்டதுபோல் ஹெல்மெட் அணிய பழகிக் கொள்ள வேண்டும். புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் அதை ஒன்றிய அரசு என்று அழைத்தோம்” என்றார்.
இதைத் தொடர்ந்து சங்கர மடம் சென்ற தமிழிசை சவுந்தரராஜன் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து பேசினார். மஹா பெரியவர், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனங்களிலும் வழிபாடு செய்தார்.