Published : 04 Jul 2021 03:13 AM
Last Updated : 04 Jul 2021 03:13 AM

கடலூர் மாவட்ட டெல்டா விவசாயிகளுக்கான குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் தொடக்கம்: குறிஞ்சிப்பாடியில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

குறிஞ்சிப்பாடியில் வேளாண்துறை சார்பில் டெல்டா விவசாயிகளுக்கான குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ கலந்து கொண்டு குறுவை சாகுபடி தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கினார்.

டெல்டா விவசாயிகளின் நலன் கருதி முதல்வர் ஸ்டாலின் ரூ.50 கோடியில் குறுவை சாகுபடி திட்டத்தை அறிவித்தார். அதன்படி கடலூர் மாவட்ட டெல்டா பகுதிக்கான குறுவை சாகுபடி திட்ட தொடக்க விழா நேற்று குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ கலந்து கொண்டு குறுவை சாகுபடி திட்ட தொகுப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், “கடலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் ஓட்டு கேட்டு உங்களை சந்தித்தேன். எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த உங்களுக்கு நன்றி சொல்ல இப்போது வந்துள்ளேன். வெற்றியை தந்த உங்களுக்கு 2 அமைச்சர்களைத் தந்துள்ளோம். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 2 மாதங்களாக சிறப்பாக ஆட்சி நடந்து வருகிறது.

இந்த விழாவில் 154 பயனாளி களுக்கு ரூ. 1 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரத்து 200 மதிப்பில் குறுவை சாகுபடி திட்ட தொகுப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளேன்.

பொதுமக்கள் நிறைய மனுக்களை அளித்துள்ளீர்கள். விரைவில் அந்த மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்து தீர்வு காணப்படும். தமிழக முதல்வர் மனுக்களை பரிசீலனை செய்ய தனித்துறையை அமைத்துள்ளார். தேர்தலின் போது அவரிடம் கடலூர் மாவட்டத்தில் இருந்து 19 ஆயிரத்து 255 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 9 ஆயிரம் மனுக்களுக்கு மேல் தீர்வு காணப்பட்டுள்ளது.

அதாவது குறுகிய காலத்தில் 50 சதவீத மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது” என்றார்.

இதனைத் தொடர்ந்து வடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாராணத் தொகுப்பை வழங்கினார்.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ர மணியம், கடலூர் வேளாண் இணை இயக்குநர் பாலசுப்ரமணியம், தோட்டக்கலை துணை இயக்குநர் சுரேஷ்ராஜா, வேளாண் உதவி இயக்குநர்கள் கடலூர் பூவராகவன், குறிஞ்சிப்பாடி அனுசுயா, தமிழ்நாடு உதவி வேளாண் அலுவலர் சங்க மாநிலத்தலைவர் அருள், திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார், பொதுக்குழு பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x