

கூடங்குளத்தில் கூடுதல் அணுஉலைகள் அமைக்கும் பணியைநிறுத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், பாபநாசம் தொகுதி எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா வலியுறுத்தினார்.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் 169- வதுஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு, ஜவாஹிருல்லா ஆகியோர் புதிய ஆம்புலன்ஸுக்கான சாவியைதமுமுக நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா கூறியதாவது:
பெட்ரோல், டீசல், எரிவாயுசிலிண்டர் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் வரும்6-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கூடங்குளத்தில் செயல்பட்டுவரும் முதல் இரு அணுஉலைகளிலும் நூற்றுக்கு மேற்பட்டமுறை பழுதுகள் ஏற்பட்டுள்ளன. 3, 4-வது அணுஉலைகளுக்கான பணிகள் மந்தகதியில் நடைபெறுகிறது. அணுஉலைகளில் இருந்து எடுக்கப்படும் அணுக்கழிவுகளை எங்கேவைக்கப்போகிறார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் இங்கு அணுஉலை பூங்கா அமைப்பது தமிழக நலனுக்கு ஏற்புடையதல்ல. 5 மற்றும் 6-வதுஅணுஉலைகளுக்கான பணியைநிறுத்தவேண்டும். கலைஉலகில் இருக்கிறவர்களை முடக்குவதற்காக மத்திய அரசு ஒளிவரைவு சட்டதிருத்த மசோதாவை கொண்டு வருகிறது. இந்த மசோதாவை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்.
சா.ஞானதிரவியம் எம்.பி., எம்.எல்.ஏக்கள் ரூபி மனோகரன், அப்துல் வகாப், ம.ம.க பொதுச்செயலாளர் அப்துல் சமது, த.மு.மு.க மாநிலச் செயலாளர் எஸ்.மைதீன் சேட்கான், மாவட்டத் தலைவர் கே.எஸ்.ரசூல் மைதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.