தேர்தலில் சீட் பெறுவதில் போட்டி: அதிமுகவினரிடையே தொடங்கியது பிளக்ஸ் யுத்தம்

தேர்தலில் சீட் பெறுவதில் போட்டி: அதிமுகவினரிடையே தொடங்கியது பிளக்ஸ் யுத்தம்
Updated on
2 min read

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி நெல்லையில் திரும்பிய பக்கமெல்லாம் அதிமுக வினர் பிளக்ஸ் போர்டுகளை வைத்திருக்கிறார்கள். தேர்தல் நெருங்குவதால் கட்சித் தலைமையின் கவனத்தைப் பெற்று சீட் பெறும் முயற்சியாக இச்செயலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பிப்ரவரி 24-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை யொட்டி கோயில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், தர்காக்களில் சிறப்பு வழிபாடு நடத்தவும், நலத் திட்ட உதவிகள் வழங்கவும், விளை யாட்டுப் போட்டிகளை நடத்தவும் அதிமுகவினர் உற்சாகத்துடன் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஆண்டாக இருப்ப தால் அதிமுகவினரின் உற்சாகம் இரட்டிப்பாகியிருக் கிறது. அதன் வெளிப்பாடாக முக்கிய சாலைகளில் எல்லாம் பிளக்ஸ் போர்டுகளை வைப்பதில் அதிமுக நிர்வாகிகள் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

மீண்டும் இரட்டை இலை

திருநெல்வேலி மாநகராட்சியிலும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் முக்கிய சந்திப்புகளில், சாலைகளில் திரும்பிய பக்கமெல்லாம் முதல்வர் ஜெயலலிதாவின் வண்ணப் படங்களுடன், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பிளக்ஸ் போர்டுகளை வைத்திருக்கிறார்கள்.

கடந்த 2 ஆண்டுகளாக இத்தகைய பிளக்ஸ் போர்டுகளில் இரட்டை இலை சின்னங்களை பார்க்க முடியவில்லை. தற்போது வைத்திருக்கும் பிளக்ஸ் போர்டுகளில் விதவிதமான வாசகங்களுடன் இரட்டை இலை சின்னமும் இடம்பெற்றுள்ளது. 234-க்கு 234 என்று தங்களது வெற்றி இலக்கு கணக்கையும் அதில் தவறாது சேர்த்திருக்கிறார்கள்.

போக்குவரத்துக்கு இடையூறு

இந்த பிளக்ஸ் போர்டு களை வைக்க, முக்கிய சந்திப்புகளில் இடம்பிடிப்பதில் நிர்வாகி களிடையே போட்டி நிலவுகிறது. இந்த போர்டுகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதும், பாதசாரி கள் நடந்து செல்ல முடியாத நிலை இருப்பதையும் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. இதைப் பார்க்கும் சாமானியர்கள், முறையாக அனுமதி பெற்றுத்தான் இந்த பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்புகின்றனர்.

கவனத்தை ஈர்க்க

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, விதிமுறைகள் அமலுக்கு வந்தபின் இத்தகைய பிரம்மாண்ட பிளக்ஸ் போர்டுகளை வைக்க முடியாது என்பதை அதிமுகவினர் உணர்ந்திருக்கிறார்கள். அவ்வாறு வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு, பிளக்ஸ் போர்டுகளை வைத்தால் அந்தந்த வேட்பாளரின் செலவு கணக்கில் அது வந்துவிடும். இதனால்தான், இப்போதே முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுகிறோம் என்ற பெயரில், இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிளக்ஸ் போர்டுகளை வைத்துள்ளனர்.

மேலும், தேர்தலில் போட்டியிட தங்களுக்கு சீட் கிடைக்கும் என்ற அதிமுகவினரின் அபரிமிதமான நம்பிக்கையும் இந்த பிளக்ஸ் போர்டு விளம்பரங்களில் வெளிப்படுகிறது. எப்படியாவது தலைமையின் கவனத்துக்கு வந்து சீட் கிடைக்காதா என்ற ஏக்கமும் இதில் தெரிகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தி லுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு சீட் கேட்டு 1,500 பேர் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். ஒரு தொகுதிக்கு 150 பேர் என்ற எண்ணிக்கையில் மனு கொடுத்திருக்கும் பலரும் தங்களது முகத்தை இப்போதே மக்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாக பிளக்ஸ் வைப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

முதல்வர் ஜெயலலிதா இந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தும் தொகுதிக்கு 30 பேர் வரையில் மனு அளித்திருப்பதாக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

எது எப்படியோ தங்களை முன்னிலைப் படுத்திக் கொண்டு, தேர்தலில் சீட் பெற அதிமுகவினர் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி பலனளிக்குமா என்பது வேட்பாளர் பட்டியல் வெளியாகும்போது தெரியவரும்.

`பஞ்ச்’ தகவல்

அதிமுகவினர் பிளக்ஸ் போர்டுகளை வைப்பதில் காட்டும் ஆர்வத்துக்கு, காவல்துறையும்கூட தடையாக இல்லை என்றே தெரிகிறது. அதே சமயம், தேமுதிக மாநாடு தொடர்பாக சங்கரன்கோவிலில் பிளக்ஸ் போர்டு வைத்த அக்கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in