

''தமிழகத்தில் தினசரி 7 முதல் 8 லட்சம் மக்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கான கட்டமைப்புகள் இருந்தபோதிலும், அதை முழுமையாகப் பயன்படுத்த இயலாத நிலைக்கு முடக்குவது மத்திய அரசே. மாநிலத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை முன்கூட்டியே அல்லது விரைந்து அனுப்பப்படுமானால் முறையாகத் தடையின்றித் தடுப்பூசிகளைப் போட முடியும்'' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை:
“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழுக் கூட்டம் சென்னையில் ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
கரோனா காலத்திலும் மக்கள் மீது சுமை: ஏழு மாதத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.240/- உயர்வுக்குக் கண்டனம்
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையின் காரணமாக, பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு செய்யும் உரிமை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டதன் விளைவாகவும், மத்திய அரசின் வரிவிதிப்புக் கொள்கை காரணமாகவும் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து 1 லிட்டர் ரூ.100/-ஐத் தாண்டிச் சென்றுள்ளது.
கரோனா தொற்று முழுமையாக நீங்காத நிலையிலும், மக்களின் அன்றாட வாழ்க்கை சகஜ நிலைக்குத் திரும்பாத சூழலில், வாழ்வாதாரம் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நேரத்தில் சமையல் கேஸ் ஒரு சிலிண்டருக்கான விலை ரூ.25.50/- நேற்று இரவு முதல் உயர்வு ஏற்பட்டுள்ளது.
உண்மையில் கடந்த 7 மாதங்களில் ரூ.240/- உயர்ந்து, தற்போதைய உயர்வும் சேர்ந்தால் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.850.50/- ஆக உயர்ந்துள்ளது. 2016ஆம் ஆண்டு சிலிண்டர் விலை ரூ.406/-. இந்த 5 ஆண்டுகளில் கேஸ் சிலிண்டர் விலை ரூ.850.50/- எனில் விலை உயர்வு 110 சதவிகிதம். 2019ஆம் ஆண்டு மத்திய அரசின் சிலிண்டருக்கான மானியம் ரூ.243/- அந்த மானியத்தொகையும் படிப்படியாக நிறுத்தப்பட்டுவிட்டது. மேலும் 18 சதம் ஜிஎஸ்டி வரி வசூலிப்பது கொடுமையிலும் கொடுமை.
சிலிண்டர் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கை எடுப்பதோடு மானியத்தையும் உயர்த்தித் தர வேண்டுமென ஒன்றிய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. பெட்ரோல்-டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு எனத் தொடர்ந்து மக்கள் மீது பொருளாதாரத் தாக்குதல் நடத்தும் மத்திய அரசைக் கண்டித்தும் - விலையுயர்வைக் கைவிடக் கோரியும் - மானியத்தை அதிகரிக்கக் கோரியும் கண்டனக் குரல்கள் முழங்கட்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயக சக்திகளை அறைகூவி அழைக்கிறது.
5 மாவட்டங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று: தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டும்
தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் இரண்டாவது கட்ட கரோனா மிகுந்த உச்சத்தைத் தொட்டு, மரணங்கள் கூடுதலான நேரத்தில் - கூடுதல் கவனத்தோடு மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள் என அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட்டதன் விளைவாக இரண்டாவது அலை தொற்று பின்னுக்குத் தள்ளப்பட்டும் ஊரடங்கில் தளர்வுகளை அரசு அறிவித்து- சகஜ வாழ்க்கைக்குத் திரும்பும் இச்சூழலில், குறிப்பாக தமிழகத்தின் 5 மாவட்டங்கள் முறையே தஞ்சை, திருநெல்வேலி, மதுரை, கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதாக ஊடகத்தின் மூலம் வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.
ஆகவே, தமிழக அரசு மேற்கூறிய மாவட்டங்களில் கூடுதலான கவனம் செலுத்தி தொற்றுப் பரவலுக்கான மூலகாரணத்தைக் கண்டறிந்து, தொடக்கத்திலேயே கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், இம்மாவட்டங்களில் போதுமான மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்து ஒருங்கிணைப்பை உருவாக்கி, தேவையான நிதி ஒதுக்கீடும் செய்து தொற்று பரவாமலிருக்க உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.
தமிழகத்திற்கு கரோனா தடுப்பூசியைத் தடையின்றி வழங்கிடுக
நாடு முழுவதும், கரோனா தொற்றால் கோடிக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகி மீண்டு வருகின்றனர். மத்திய அரசின் தவறான கொள்கை காரணமாகவும், திட்டமிடலில் போதிய அக்கறையின்மை காரணமாகவும், நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பதின் காரணமாகவும், அதிகாரக் குவிப்புக் கொள்கை மூலமாகவும் சுகாதாரம் பாதிக்கப்பட்டு மாநிலங்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன.
விழிப்புணர்வுமிக்க தமிழகத்தில் தினசரி 7 முதல் 8 லட்சம் மக்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கான கட்டமைப்புகள் இருந்தபோதிலும், அதை முழுமையாகப் பயன்படுத்த இயலாத நிலைக்கு முடக்குவது மத்திய அரசே. மாநிலத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை முன்கூட்டியே அல்லது விரைந்து அனுப்பப்படுமானால் முறையாகத் தடையின்றி தடுப்பூசிகளைப் போட முடியும்.
இவை தவிர தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவிகித தடுப்பூசி அளிக்கப்பட்டாலும், அவற்றின் பயன்பாடு சுமார் 5 சதவிகிதம் எனத் தமிழக அரசு சுட்டிக்காட்டியிருப்பதை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். தனியாருக்கு ஒதுக்கீடு செய்த அளவைக் குறைத்து, தமிழக அரசு கோரிய அளவிற்கு தடுப்பூசிகளை ஒன்றிய அரசு கால தாமதமின்றி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
உலக சுகாதார நிறுவனம் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 10 சதவிகித மக்களுக்குத் தடுப்பூசி போட வேண்டுமெனவும், இந்த ஆண்டு இறுதிக்குள் 40 சதவிகித தடுப்பூசி போட்டாக வேண்டும் என அறிவுறுத்தி இருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசியை ஒதுக்கீடு செய்வதிலும், முறையாக அனுப்பி வைப்பதிலும் பாரபட்சமின்றி மத்திய அரசு செயல்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.
மருத்துவர்களின் ஊதிய உயர்வுக் கோரிக்கையை தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றால் மிக நெருக்கடியைச் சந்தித்த சூழலில் - குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களின் தன்னலமற்ற சேவை காரணமாக மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து மீண்டு வருகிறோம் என்பதை யாரும் மறுக்க இயலாது.
தொற்றுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததன் மூலமாக மருத்துவர்களும் தொற்றுக்கு ஆளாகி தமிழகத்தில் 72 மருத்துவர்கள் பலியானார்கள் என்பதை கனத்த இதயத்தோடு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
கடந்த ஆட்சிக் காலத்திலிருந்து மருத்துவர்கள் தங்களின் ஊதிய உயர்வுக்காகக் குரல் கொடுத்தும், போராடியும் அவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. நம்பிக்கையோடு, மருத்துவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்துவதோடு, உடனடியாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
அவர்களின் எதிர்பார்ப்பு பொய்ப்பிக்காமல் நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் பணியாற்றிட மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை காலத்தே நிறைவேற்றிட தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
கர்நாடக அரசு - பெண்ணையாற்றில் புதிய அணை: தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்
கரோனா ஊரடங்கைப் பயன்படுத்தியும் - முந்தைய அதிமுக அரசின் செயலற்ற தன்மை காரணமாகவும், கர்நாடக பாஜக அரசு பெண்ணையாற்றில் 430 மீட்டர் நீளம் 50 மீட்டர் உயரத்திற்குப் புதிய அணை கட்டியுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே தமிழக அரசு 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அதன் காரணமாக மத்திய ஜல்சக்தி அமைச்சகம் ஒரு குழு அமைக்கப்பட்டு - 2020 பிப்ரவரி 24-ம் தேதி முதல் கூட்டம் நடந்துள்ளது. அதன்பின் நடைபெற வேண்டிய கூட்டமும் நடக்கவில்லை. அதிமுக அரசும் தொடர் நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழக அரசின் தொடர் நடவடிக்கை ஏதும் இல்லாத நிலையில் கர்நாடக அரசு வேகவேகமாகப் பெண்ணையாற்றில் தடுப்பணை மதகுகள் கூட இல்லாமல் கட்டி முடித்துள்ளனர். 50 மீட்டர் உயரத்திற்கு மேல் நீர்வழிந்தால்தான் வட தமிழகத்திற்கு நீர் வர இயலும்.
இதனால் கிருஷ்ணகிரி கே.ஆர்.அணைக்குத் தண்ணீர் வருவது என்பது கானல் நீரே. ஐந்து மாவட்டங்கள் முறையே கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் நீரின்றி விவசாயம் பாதிக்கும் அபாயம் ஏற்படும்.
தமிழக அரசு உடனடியாக உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது”.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.