Last Updated : 03 Jul, 2021 05:11 PM

 

Published : 03 Jul 2021 05:11 PM
Last Updated : 03 Jul 2021 05:11 PM

கோவை மாவட்ட வன வளர்ச்சி முகமை சார்பில் யானைகள் உருவம் பொறித்த டி-ஷர்ட் விற்பனை தொடக்கம்

யானைகள் உருவம் பொறித்த டி-ஷர்ட் விற்பனையைத் தொடங்கிவைத்த வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்.

கோவை

கோவை மாவட்ட வன வளர்ச்சி முகமை, தனியார் ஆடை நிறுவனம் ஆகியவை இணைந்து, யானைகள் உருவம் பொறித்த டி-ஷர்ட்டுகளை வடிவமைத்துள்ளன. இதன் விற்பனையை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், கோவை மண்டலக் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஐ.அன்வர்தீன் ஆகியோர் இன்று (ஜூலை 03) தொடங்கிவைத்தனர்.

இது தொடர்பாக, மாவட்ட வன அலுவலர் து.வெங்கடேஷ் கூறியதாவது:

"பல்வேறு வண்ணங்கள் கொண்ட இந்த டி-ஷர்ட்டுகளில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானைப் படங்களுடன், ஆங்கிலத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. தமிழில் வாசகங்கள் அமைந்த டி-ஷர்ட்டுகள் தற்போது வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

யானைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த டி-ஷர்ட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜிஸ்டியுடன் சேர்த்து ஒரு டி-ஷர்ட்டின் விலை ரூ.600. கோவை மாவட்ட வன வளர்ச்சி முகமை மூலம் அனைத்து வனத்துறை சுற்றுலாத் தலங்களிலும் இந்த டி-ஷர்ட்டுகள் விற்பனை செய்யப்படும்.

இதன் மூலம் கிடைக்கக்கூடிய வருவாய் அனைத்தும் யானைகள் பாதுகாப்புக்காக வழங்கப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை coimbatorewilderness.com என்ற இணையதளம் முலம் அறிந்துகொள்ளலாம்.

மேலும், டி-ஷர்ட் வாங்க விரும்புவோர் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் வடகோவையில் அமைந்துள்ள மாவட்ட வன அலுவலகம் (94895 45585), போளுவாம்பட்டி வனச்சரக அலுவலகம் (87785 77160, 94861 69416), காரமடை வனச்சரக அலுவலகம் (9489 968480) ஆகிய இடங்களைத் தொடர்புகொண்டு நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்".

இவ்வாறு மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x