தமிழகத்திலேயே முதன்முறை: பெண்ணாடத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசித் திட்டம் தொடக்கம்

தமிழகத்திலேயே முதன்முறை: பெண்ணாடத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசித் திட்டம் தொடக்கம்

Published on

தமிழகத்திலேயே முதல்முறையாக பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியைச் சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று கடலூர் வந்தார். அங்கு பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டார்.

மத்திய சுகாதாரத்துறை கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என நேற்று அறிவித்த நிலையில், பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்திருந்த கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

இதையடுத்து திட்டக்குடி அரசு மருத்துவமனையில் 45 ஆக்ஸிஜன் படுக்கைகளைக் கொண்ட சிறப்பு கரோனா வார்டை திறந்துவைத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரணியன், திருவள்ளுவர் அரசுக் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் செறிவூட்டியுடன் கூடிய 150 படுக்கைகளைக் கொண்ட சிறப்பு கரோனா சிகிச்சை மையத்தையும் திறந்துவைத்தார்.

இதையடுத்து திமுக சார்பில் திட்டக்குடியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முடி திருத்தும் தொழிலாளர்கள், ஆட்டோ, கார், வேன் ஓட்டுநர்கள், சலவைத் தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என 2,500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் திட்டக்குடி வெலிங்டன் ஏரியை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டபோது, அங்கிருந்த விவசாயிகள் ஏரியைத் தூர்வாரவேண்டும் என்று அவரிடம் கோரிக்கையை முன்வைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in