

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக, தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தமிழகம், கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான பணி களில் தேர்தல் ஆணையம் ஈடு பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 234 தொகுதி களிலும் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகளை தேர்தல் துறை செய்து வருகிறது.
தமிழக தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி உள்ளிட்ட 3 ஆணை யர்களும் இம்மாதம் 10, 11 ஆகிய தேதிகளில் சென்னை வர உள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினருடன் அவர்கள் ஆலோ சனை நடத்த உள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக தேர்தல் துறை இன்னும் வெளியிடவில்லை.
இந்நிலையில், ஏற்கெனவே தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்து சமீபத்தில் மத்திய இணை தேர்தல் ஆணை யராக பொறுப்பேற்றுள்ள சந்தீப் சக்சேனா உட்பட தேர்தல் ஆணைய அதிகாரிகள் 5 பேர் நேற்று சென்னை வந்தனர். அவர்கள், தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். மாலை வரை நீடித்த இந்தக் கூட்டத்தில், தேர்தல் ஆணையர்களின் வருகை, அதற்கான ஏற்பாடுகள், தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.