ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம்; தொடர்ந்து நடத்திட நடவடிக்கை: ஓபிஎஸ் வலியுறுத்தல்

ஓபிஎஸ்: கோப்புப்படம்
ஓபிஎஸ்: கோப்புப்படம்
Updated on
1 min read

ஜெயலலிதாவின் பெயரிலான பல்கலைக்கழகத்தை தொடர்ந்து நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (ஜூலை 03) வெளியிட்ட அறிக்கை:

"ஒவ்வொரு ஆண்டும் புதிதாக மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆங்காங்கே உருவாக்கப்படுவதும், புதிதாக மாவட்டங்கள், கோட்டங்கள், வட்டங்கள் பிரிக்கப்படுவதும் ஏழை, எளிய, கிராமப்புற மாணவ, மாணவிகள் உயர் கல்வி பெற வேண்டும் என்பதற்காகவும், ஏழை, எளிய மக்கள் அரசு நலத்திட்டங்களை விரைந்து பெற வேண்டும் என்பதற்காகவும் தான்.

இதன் அடிப்படையில், ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து, ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்ற வரிசையில், விழுப்புரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு, புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று ஜெயலலிதாவின் வழியில் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில், விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஜெயலலிதாவின் பெயரில் புதிய பல்கலைக்கழகத்தை உருவாக்க 5-02-2021 அன்று தமிழக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, பின்னர் சட்டமாக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அரசாணையும் வெளியிடப்பட்டது. அதில், 2021-22 ஆம் கல்வியாண்டு முதல் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இந்தப் பல்கலைக்கழகத்தில்தான் இணைப்பு பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், பொதுத் தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, கல்லூரிகளுக்கான அறிவிப்பு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதில் ஏற்கெனவே திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மற்றும் இணைப்பு பெற விண்ணப்பிக்க வேண்டும் என்றும், புதிதாக தொடங்கப்பட்ட ஜெயலலிதாவின் பெயரிலான பல்கலைக்கழகத்தின் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியம் கலைப்பு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மாற்றம் என்ற வரிசையில் தற்போது ஜெயலலிதாவின் பெயரிலான பல்கலைக்கழகத்தை மூடும் முயற்சியில் திமுக அரசு இறங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.

அதிமுக ஆட்சியில் உருவாக்கியவற்றையெல்லாம் கலைப்பது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. ஒருவேளை ஜெயலலிதாவின் பெயரில் பல்கலைக்கழகம் இருக்கக்கூடாது என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற வேலைகளில் திமுக ஈடுபடுகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, ஏழை, எளிய கிராமப்புற மக்கள் உயர்கல்வி பெற ஏதுவாக, விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்ட ஜெயலலிதாவின் பெயரிலான பல்கலைக்கழகத்தை தொடர்ந்து நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in