வார்டு மறுவரையறை குளறுபடிகளைச் சரிசெய்ய புதுச்சேரி முதல்வர் நடவடிக்கை எடுப்பார்: திருநள்ளாறு எம்எல்ஏ நம்பிக்கை

அம்பகரத்தூரில், கிராம மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.சிவா.
அம்பகரத்தூரில், கிராம மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.சிவா.
Updated on
1 min read

காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூர் கிராமப் பஞ்சாயத்தில், உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு மறுவரையறை செய்யப்பட்டதில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்ய, புதுச்சேரி முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் எனத் திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.சிவா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள், கிராமப் பஞ்சாயத்துகளில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. அம்பகரத்தூர் கிராமப் பஞ்சாயத்தில் 11 வார்டுகள் இருந்தன. மறுவரையறையின்போது 8 வார்டுகளாகக் குறைத்ததுடன் தலையாரி தெரு, தலையாரி சந்து, தலையாரி கீழத்தெரு, மதரசா தெரு, புதுமனைத்தெரு, ரைஸ்மில் தெரு, பழைய அம்பகரத்தூர், காலனிபேட், கண்ணாப்பூர், கண்ணாப்பூர் பேட் உள்ளிட்ட பகுதிகளை நல்லம்பல் கிராமப் பஞ்சாயத்தில் இணைத்துவிட்டனர்.

இதற்கு அக்கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த முடிவுக்குக் கண்டனம் தெரிவித்தும், மீண்டும் பழைய நிலையே தொடர வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த ஜூன் 30-ம் தேதி அம்பகரத்தூரில் கிராம மக்கள் சார்பில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனிடையே அம்பகரத்தூரில் சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.சிவா தலைமையில் கிராம மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 3) நடைபெற்றது. இதில் நாளை (ஜூலை 4) உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்குப் பின்னர் பி.ஆர்.சிவா செய்தியாளர்களிடம் கூறுகையில், “உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக அம்பகரத்தூர் கிராமப் பஞ்சாயத்தில் வார்டு மறு வரையறை செய்யப்பட்டதில் சில குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. இங்குள்ள சில பகுதிகள் நல்லம்பல் கிராமப் பஞ்சாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கு அம்பகரத்தூர் பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடையடைப்புப் போராட்டமும் நடத்தியுள்ளனர். இதேபோல அகளங்கண் பகுதியில் உள்ள சில பகுதிகளைப் பேட்டை பஞ்சாயத்திலும், செருமாவிலங்கையில் உள்ள சில பகுதிகளைக் கருக்கன்குடி பஞ்சாயத்திலும் இணைத்துள்ளனர். புதுச்சேரி மாநிலம் முழுமையும் இதுபோன்ற பிரச்சினை உள்ளது.

இதற்கு கிராம மக்கள் சார்பிலும், நான் தனிப்பட்ட முறையிலும் ஆட்சேபனை தெரிவித்திருந்தும் கூட ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அம்பகரத்தூர் பகுதி மக்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்திய பின்னர் முதல்வர், தலைமைச் செயலர், உள்ளாட்சித்துறைச் செயலர் ஆகியோரிடம் கலந்து பேசப்பட்டுள்ளது. முதல்வர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளார். இப்பிரச்சினையை முதல்வர் சரிசெய்து கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இதுபோன்ற குளறுபடிகள் எதிர்காலத்தில் நடைபெறக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இப்பிரச்சினை தொடர்பாக கிராம மக்கள் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். அதில் நானும் கலந்துகொள்வேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in