

நீரிழிவு நோயால் 100 ஆண்டுகள்: மிகைப்படுத்தலா அல்லது உண்மையா? என்ற தலைப்பில், பொது மற்றும் நோயாளி சுகாதார விழிப்புணர்வு இரண்டாம் பகுதியாக இணையவழி கருத்தரங்கை இந்திய மருத்துவ மேலாண்மை வல்லுநர்களின் கூட்டமைப்பு நடத்துகிறது
இது தொடர்பாக, அவ்வமைப்பு இன்று (ஜூலை 03) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"மருத்துவ மேலாண்மை வல்லுநர்கள் ஒன்றிணைந்து, இந்திய மருத்துவ மேலாண்மை வல்லுநர்களின் கூட்டமைப்பு (Association for Healthcare Management Professionals - India) என்ற புதிய அமைப்பினை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
குறைந்த செலவில் எளிதில் முழுமையான மருத்துவ வசதி அனைவருக்கும் கிடைக்க வேண்டி, இதற்காகப் பங்காற்றி வரும் அனைத்து வல்லுநர்களையும் ஒருங்கிணைப்பதே இதன் முக்கியக் குறிக்கோளாகும். மேலும், மருத்துவச் செய்திகளை இதில் பங்காற்றி வரும் அனைவரிடையே பகிர்வதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
மருத்துவம் தொடர்பான புதிய உத்திகள், பிரச்சினைகள் குறித்து, இந்த அமைப்பின் மூலம் கருத்துகள் பகிரப்படும். இவ்வமைப்பின் மூலம் நடத்தப்படும் கூட்டங்கள் மற்றும் இணையவழிக் கூட்டங்களில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயன்பெறுவதுடன் தங்கள் கருத்துகளையும் தெரிவிக்கலாம்.
பொதுமக்களுக்கும் மருத்துவத்துறை சார்ந்த நபர்களுக்கும் இந்திய மருத்துவ மேலாண்மை வல்லுநர்களின் கூட்டமைப்பு தொடர்ந்து பல்வேறு கருத்தரங்குகளை நடத்திக்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 'நீரிழிவு நோயால் 100 ஆண்டுகள்: மிகைப்படுத்தலா அல்லது உண்மையா?' என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கு நடைபெற உள்ளது
நீரிழிவு நோய் இல்லாதவர்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. அந்த அளவுக்கு நீரிழிவு நோய் இன்று பெரிய பிரச்சினையாக இருக்கிறது. பலரும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். சிலர் சிகிச்சை செய்துகொண்டு நீரிழிவு நோயுடனேயே நலமாக இருக்கிறார்கள். சிலர் அரைகுறை சிகிச்சை அல்லது சிகிச்சை செய்து கொள்ளாமல் பலவிதப் பக்க விளைவுகளால் துன்பப்படுகிறார்கள்.
நீரிழிவு நோய் குறித்த தகவல்கள் முழுமையாகப் பலருக்கும் தெரியாததாலேயே இந்நிலை. இந்நிலையைப் போக்கும் வண்ணம் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் வி.மோகன், (மோகன் நீரிழிவு சிறப்பு மையம்) மேற்குறிப்பிட்ட தலைப்பில் பேச இருக்கிறார்.
இந்த அரிய நிகழ்ச்சியை கூகுள் சந்திப்பு இணையவழி முறையில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இக்கருத்தரங்கில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள பொதுமக்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் 97104 85295 என்ற வாட்ஸ் அப் எண் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது https://bit.ly/3pMD8Wd இணையதளத்திற்குச் சென்று அறியலாம்.
நாள்: 27.07.2021, செவ்வாய்க்கிழமை; நேரம்: 4.45 மணி".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுள்ளது.