Published : 03 Jul 2021 12:36 PM
Last Updated : 03 Jul 2021 12:36 PM

மார்கண்டேய நதியின் குறுக்கே அணை; நடுவர் மன்றம் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு: அமைச்சர் துரைமுருகன் உறுதி

''கர்நாடகத்தில் மார்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்பட்ட நான்கு சிறு அணைகளினால் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி தாலுக்காவில் புஞ்சை பாசன வசதி பெறும் சுமார் 870 ஹெக்டேர் பாதிக்கப்படும். தமிழக அரசு விரைவில் நடுவர் மன்றத்தை அமைக்கத் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தும்'' என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டியது பற்றி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''ஜூலை 2 அன்று சில நாளேடுகளில் மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டியுள்ளது பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன. மார்கண்டேய நதி கர்நாடகத்தில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் பெண்ணையாற்றில் கலக்கும் ஒரு சிறு கிளை நதியாகும்.

2017ஆம் ஆண்டு மத்திய நீர்வளக் குழுமத்தின் பொறியாளர்கள் ஆய்வு செய்தபோது கர்நாடக அரசு அப்பகுதியில் குடிநீர் தேவைக்காகவும் நிலநீரைச் செறிவூட்டுவதற்காகவும் சுமார் 0.5 டி.எம்.சி கொள்ளளவுள்ள ஒரு அணையைக் கட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு இந்த அணையை அநேகமாக கட்டிமுடித்துவிட்டதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவின் இச்செயலை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் 18.5.2018இல் ஒரு அசல் வழக்கும், ஒரு இடைக்கால மனுவும் தாக்கல் செய்ததன் பேரில் உச்ச நீதிமன்றம் 14.11.2019 அன்று அளித்த தீர்ப்பில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண ஒரு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று ஆணையிட்டது. இந்த நடுவர் மன்றத்தை அமைக்கத் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்துள்ளது.

29.6.2021 அன்று தமிழக அரசு மத்திய ஜல் சக்தி அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்திலும் நடுவர் மன்றத்தை விரைவில் அமைக்க வலியுறுத்தியுள்ளது. மார்கண்டேய நதியின் குறுக்கே நான்கு சிறு அணைகளினால் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி தாலுக்காவில் புஞ்சை பாசன வசதி பெறும் சுமார் 870 ஹெக்டேர் பாதிக்கப்படும். தமிழக அரசு விரைவில் நடுவர் மன்றத்தை அமைக்கத் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தும். நடுவர் மன்றத்தின் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்.

மார்கண்டேய நதியினைச் சார்ந்துள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கவும் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்”.

இவ்வாறு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x