

தமிழகத்தில் சிறந்த மருத்துவ வசதிகள் இருந்தபோதும், கரோனா தொற்று பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கை அபாயகரமானதாக உள்ளது. கரோனா இரண்டாவது அலையைத் தடுக்க தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதால் மோசமான நிலை தவிர்க்கப்பட்டது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கரோனா சிகிச்சை மையங்களில் தரம் குறைந்த உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாகக் கூறி, முத்துக்கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, “தமிழகத்தில் சிறந்த மருத்துவ வசதிகள் இருந்தபோதும், கரோனா தொற்று பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கை அபாயகரமானதாக உள்ளது. கரோனா இரண்டாவது அலையைத் தடுக்க தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதால் மோசமான நிலை தவிர்க்கப்பட்டது.
இருப்பினும், இது சம்பந்தமாக தெளிவான கொள்கையைத் தெரிவிக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மாநிலத்தில் அனைத்துப் பிரிவினருக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். சிறந்த மருத்துவ வசதிகள் வசதியானவர்களுக்கு மட்டும் என்ற நிலை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும்” எனக் கூறி, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.