

முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்த மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டத்தின் கீழ் இதுவரையில் 22 ஆயிரத்து 500 பேருக்கு அடையாள அட்டை, டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் சென்னை மாநகர பஸ்களில் கட்டணமில்லாமல் பயணம் செய்ய வகை செய்யும் திட்டத்தை முதல்வர் கடந்த 20-ம் தேதி தொடங்கிவைத்தார். இத்திட்டம் நேற்று (24-ம் தேதி) முதல் அமலுக்கு வந்தது. இதுவரையில் 22 ஆயிரத்து 500 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு, இலவச பயணம் மேற்கொள்வதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி ஏசி பஸ்களைத் தவிர, அனைத்து மாநகர பஸ்களிலும் பயணம் செய்யலாம்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் பி.தங்கமணி மாநகர பஸ்களில் பயணம் செய்த மூத்த குடிமக்களிடம் இத்திட்டம் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் பாலகிருஷ்ணசாமி உடனிருந்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.