Published : 08 Jun 2014 12:21 PM
Last Updated : 08 Jun 2014 12:21 PM

சன் டி.வி. முன்னாள் நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை: முறைகேடான தொலைபேசி தொடர்பகம் குறித்த வழக்கு

முறைகேடான வகையில் சென்னையில் தொலைபேசி தொடர்பகம் வைத்திருந்ததாக சன் டி.வி. குழுமம் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக, அந்நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள், சிபிஐ அலுவலகத்தில் சனிக்கிழமை ஆஜராகினர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கடந்த 2004 முதல் 2007-ம் ஆண்டு மே வரை, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அப்போது, சென்னை போட்கிளப்பில் உள்ள அவரது வீட்டுக்கு சட்டவிரோதமாக 323 ஐ.எஸ்.டி.என்.தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்டதாகவும், அவை தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும் சன் டி.வி. நிறுவனத்துக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் கடந்த 2007-ம் ஆண்டிலேயே சிபிஐக்கு புகார் வந்தது.

தயாநிதி மாறன் வீட்டுக்கு கொடுக்கப்பட்ட 323 தொலைபேசி இணைப்புகளும் பி.எஸ்.என்.எல். பொது மேலாளரின் பெயரில் வாங்கப்பட்டிருந்தது. இந்த இணைப்புகள், வீடியோ கான்பரன்சிங், அதிக சக்திவாய்ந்த டிஜிட்டல் ஒளிபரப்பு போன்றவற்றுக்காக பெரிய வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடியவை ஆகும். இவற்றுக்கான கட்டணமும் அதிகம். ஆனால், இலவசமாகவே சன் டி.வி.க்கு இந்த இணைப்புகள் பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அப்போதைய தொலைத் தொடர்புத் துறை செயலாளருக்கு சி.பி.ஐ. தெரிவித்தது. ஆனால், நடவடிக்கை எடுக்க தொலைத்தொடர்புத் துறை ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த 2011-ம் ஆண்டு பூர்வாங்க விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் சில பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது கடந்த ஆண்டு அக்டோபரில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், சன் டி.வி. நிறுவனத்தின் முன்னாள் செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, சென்னையில் உள்ள சி.பி.ஐ. ஊழல் தடுப்பு அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்த விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதேபோல, சன் டி.வி.யின் முன்னாள் நிர்வாகி சரத்குமாரும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியிருந்தார். அவர்கள் இருவரிடமும் மதியம் 12 முதல் 1.15 மணி வரை விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x