Published : 03 Jul 2021 03:12 AM
Last Updated : 03 Jul 2021 03:12 AM

கரோனா தடுப்பூசி போட கட்டிலுடன் வரிசையில் காத்திருந்த மக்கள்: ஈரோட்டில் இரவிலே களைகட்டும் கூட்டம்

ஈரோட்டில் கரோனா தடுப்பூசி போட இரவு முழுவதும் வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதால், கட்டில் எடுத்து வந்து வரிசையில் போட்டு பெண்கள் காத்திருந்த சம்பவம் நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4.43 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வத்துடன் வருவதால், கூட்டம் அலைமோதுகிறது.

கரோனா தடுப்பூசி மருந்துக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், சென்னையில் இருந்து எவ்வளவு தடுப்பூசி மருந்துகள் வரும், எப்போது வரும் என்ற தகவல் ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறையினருக்கே கடைசி நேரத்தில்தான் கிடைக்கிறது. பல நாட்களில் நள்ளிரவிலும், அதிகாலையிலும் ஈரோடு வரும் தடுப்பூசி மருந்துகள், உடனடியாக மையங்களுக்கு அனுப்பப்பட்டு அடுத்தநாள் காலை ஊசி போடப்படுகிறது.

சராசரியாக ஈரோடு மாவட்டத்துக்கு 10 ஆயிரம் தடுப்பூசிகள் வரும் நிலையில், ஒரு மையத்துக்கு 100 பேர் என்ற அடிப்படையில் பிரித்து வழங்கப்படுகிறது. ஈரோடுநகரப்பகுதியில் தடுப்பூசி போடுபவர்கள் வரிசையில் நிற்க வட்டமிடப்பட்டுள்ள பகுதிகளில், முதல்நாள் இரவு 8 மணி முதலே பொதுமக்கள் இடம் பிடிக்கத் தொடங்கிவிடுகின்றனர்.

நேற்று (2-ம் தேதி) காலை தடுப்பூசி போடுவதற்காக, நேற்று முன்தினம் (1-ம் தேதி) இரவு கனமழையிலும் பொதுமக்கள் குடைபிடித்து வரிசையில் காத்திருந்தனர். இதில், ஈரோடு மாரப்ப முதல்வீதியில் உள்ள மையத்தில் தடுப்பூசி போட வந்த அப்பகுதியைச் சேர்ந்த கீதா, சாரதா ஆகியோர் வீட்டில் இருந்து மடக்கு கட்டில் மற்றும் குடிநீர் பாட்டிலுடன் வந்தனர். வரிசையில் கட்டிலைப் போட்டு அதில் அமர்ந்து இரவு முழுவதும் காத்திருந்து தடுப்பூசி போட்டனர். பல்வேறு இடங்களில் காலணி, கற்கள் வைத்தும் பொதுமக்கள் வரிசையில் இடம் பிடித்தனர்.

டோக்கன் முறையில் மாற்றம்?

தடுப்பூசி போட எத்தனை பேர் காத்திருந்தாலும் வரிசையில் நிற்கும் முதல் 100 பேருக்கு மட்டுமே பெரும்பாலும் டோக்கன்வழங்கப்பட்டு ஊசி போடப்படுகிறது. சில நேரங்களில் கூடுதல் ஊசி மருந்துகள் ஒதுக்கப்படும் என்பதால் 500-க்கும் மேற்பட்டோர் நம்பிக்கையோடு வரிசையில் காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

எனவே, வரிசையில் காத்திருப்போருக்கு அடுத்தநாள் (எப்போது ஊசி போடப்படுகிறதோ அந்த நாள்) ஊசி போடும் வகையில் டோக்கன் வழங்கினால், அவர்கள் மீண்டும் வரிசையில் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படும். ஆனால், தடுப்பூசி மருந்து எப்போது வரும்,எவ்வளவு வரும் என்பது தெரியாத நிலையில், எந்த முடிவும்எடுக்க முடியவில்லை எனசுகாதாரத் துறையினர் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x